தஞ்சோங் பகாரில் அதிவேகமாக காரைச் செலுத்திய மாதுக்கு $5,000 அபராதமும் மூன்று ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டன.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாலை 5.35 மணியளவில் பிஎம்டபிள்யூ காரை அபாயகரமாகச் செலுத்தியதை மலேசியரான 26 வயது ஃபூ யி லின் (படம்) ஒப்புக்கொண்டார்.
தஞ்சோங் பகார் சாலையில் வாகனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 50 கிலோமீட்டர் மட்டுமே. ஆனால் ஃபூ மணிக்கு 109 கிலோமீட்டர் வேகத்தில் காரைச் செலுத்தினார். அப்போது அவர் மது அருந்தியிருந்தார் என்று கூறப்பட்டது.
சில நிமிடங்கள் கழித்து காரின் உரிமையாளர் ஜோனதன் லோங் ஜுன்வெய், நான்கு பயணிகளுடன் அந்த காரை ஓட்டிச் சென்றார். அப்போது கார் விபத்துக்குள்ளானதில் ஐவரும் உயிர் இழந்தனர்.
அங் மோ கியோவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜோனதனும் அவரது நண்பர்களும் பின்னர் அங்கு இருந்து தங்கள் நண்பர் தஞ்சோங் பகார் சாலையில் நடத்திய உணவகத்துக்குச் சென்றனர்.
அங்கு அவர்கள் மேலும் மது அருந்தினர். பின்னர் லோங்கின் புதிய பிஎம்டபிள்யூ காரை ஒவ்வொருவராக ஓட்டிப் பார்த்தனர்.
உரிமையாளர் லோங் காரை ஓட்டியபோது மணிக்கு 182 கிலோமீட்டர் வேகத்தில் அவர் அதைச் செலுத்தினார். கடை வீடு ஒன்றின் தூணில் மோதிய கார் தீப்பற்றி எரிந்ததில் அதில் இருந்த ஐவரும் மாண்டனர்.
லோங்கின் வருங்கால மனைவி அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியில் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானார்.
ஃபூ தனது தவற்றை ஒப்புக்கொண்டதுடன் விசாரணையில் உதவும் பொருட்டு கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.