சித்திரைப் புத்தாண்டு மற்றும் இந்திய கலாசாரத் திருவிழாவை இம்மாதம் முழுவதும் குதூகலத்துடன் கொண்டாட லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஒளவையாரை மையமாக வைத்துக் கொண்டாடப்படும் சித்திரைக் கலை விழா இம்மாதம் 16ஆம் தேதி பெர்ச் சாலையின் திறந்தவெளியில் நடைபெறும். ஒளவையாரின் புகழையும் எழுத்தையும் பாராட்டும் இவ்விழாவிற்கு 1,000 பேர் வரை வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இலவச நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு தொடங்கி மூன்று மணி நேரம் நடைபெறும். சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வர்.
தமிழ், பெங்காலி, பஞ்சாபி, இந்திய முஸ்லிம், மலையாளி உள்ளிட்ட 15 இந்திய சமூகங்களின் பாரம்பரிய நடனங்கள் வரும் 15 தேதி நடைபெறும். இவ்விழாவில் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் கலந்துகொள்வார்.
உணவை முன்னிலைப்படுத்தி கொண்டாட 15 இந்திய சமூகங்கள் தொடர்பான கண்காட்சி பெர்ச் சாலையில், வரும் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும். இங்கு அமைக்கப்படும் 16 உணவுக்கூடங்களில் வெவ்வேறு இந்திய உணவு வகைகளை மக்கள் ருசிக்கலாம்.
ஐந்து மரபுடைமைகளைப் பறை சாற்றும் உணவகங்களின் உணவு வகைகளைச் சுவைத்து மேலும் தெரிந்துகொள்ள ஓர் உணவுச் சுற்றுலா 8, 15, 29ஆம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங் கேற்க $10 கட்டணம்.
இதற்கிடையே, யோகாசனம் செய்ய ஆர்வம் இருப்பவர்கள் 8, 15ஆம் தேதிகளில் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே நடக்கும் யோகா பயிற்சியில் கலந்துகொள்ளலாம். மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஒரு மணிநேர இலவசப் பயிற்சிக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்களைத் தமிழில் உரையாட ஊக்குவிக்க, பேச்சுப் பயிலரங்கு ஒன்று 16ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து நண்பகல் வரை நடத்தப்படும். 50 பேர் மட்டும் அனுமதிக்கப்படும் இந்தப் பயிலரங்கில் சேரவும் முன்பதிவு அவசியம்.
இதில் பல்வேறு இந்தியக் கலாசாரங்களைப் பற்றி மக்களிடம் எடுத்து கூறும் வகையில் 'ஜாய் ஆஃப் ட்ரடிஷன்' என்ற ஐந்து நாள் நிகழ்ச்சி 17ஆம் தேதி தொடங்கும்.
பெர்ச் சாலையின் திறந்த வெளிக் கூடாரத்தில் நடைபெறும் இந்த இலவச நிகழ்ச்சியில் தமிழ் எழுத்துக் கலை, ரங்கோலி கலை, பங்க்ரா போன்ற நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடலாம். இதில் பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்களையும் கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ள திருக்குறள் எழுதும் நிகழ்ச்சி இம்மாதம் 23ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் நிலையத்துடன் சேர்ந்து நடத்தும் இந்த விழாவில் நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொள்வர். ஒரு மணி நேரத்தில் ஆத்திசூடி, திருக்குறள்களை எழுதி அவர்களின் வாழ்க்கை அனுபவங்களோடு இணைக்க இந்த நிகழ்ச்சி ஊக்குவிக்கிறது.
ஒளவையாரின் ஆத்திசூடி பழமொழிகளை மக்களுக்கு எடுத்துக்கூற 64 விளம்பரப் பதாகைகள் சிராங்கூன் சாலை முழுவதும் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பதாகையிலும் ஒளவையாரின் பழமொழி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

