உண்ணும் இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் சிங்கப்பூரர்கள் அதிகப் பொறுப்புடன் நடந்துகொள்வது அண்மைய ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது.
காப்பிக்கடைகளில் அல்லது உணவங்காடி நிலையங்களில் உண்டபின் உரிய இடத்தில் தட்டுகளைத் திரும்பக் கொண்டுபோய் வைப்பதாகக் கடந்த ஆண்டு இடம்பெற்ற கருத்தாய்வில் பங்கேற்றோரில் 95 விழுக்காட்டினர் தெரிவித்தனர். முந்திய 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 46% அதிகம்.
உணவு உண்டபின் தட்டுகளைத் திரும்ப வைக்காவிடில் அபராதம் விதிக்கும் முறை சென்ற ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனாலும், அபராதம் விதிக்கப்படலாம் என்பதனால் மட்டுமின்றி, தட்டுகளைத் திரும்ப வைப்பது தங்களது பொறுப்பு என்பதைப் பலரும் உணர்ந்துள்ளனர். சமூகப் பொறுப்பாகக் கருதி, அவ்வாறு தாங்கள் செய்வதாக 'பொதுத் தூய்மை மனநிறைவுக் கருத்தாய்வு 2022'ல் பங்கேற்றோரில் 78.4 விழுக்காட்டினர் கூறினர்.
அத்துடன், உணவு மேசையைத் தூய்மையாக வைத்து இருப்பதில் அதில் அமர்ந்து உண்பவர்களுக்கே முதன்மைப் பொறுப்பு என்றும் 84 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் 5வது முறையாக நடத்திய இந்த ஆய்வில் 2,020 பேர் பங்கெடுத்தனர்.

