சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் ஊதியமும் கூடியது
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்தைச் (எஸ்யுடிடி) சேர்ந்த புதிய பட்டதாரிகளில் 10ல் ஒன்பது பேருக்கு, இறுதித் தேர்வை எழுதிய உடனேயே ஆறே மாதங்களில் வேலை கிடைத்துவிட்டது.
முழுநேரமாக வேலையில் சேர்ந்த அத்தகைய புதிய பட்ட தாரிகளின் மொத்த மாதாந்திர சராசரி சம்பளம் 2021ல் $4,500 ஆக இருந்தது. அது சென்ற ஆண்டில் $4,800 ஆக அதிகரித்தது. அதேவேளையில், அவர்களின் மொத்த மாதாந்திர சம்பளம் $4,730லிருந்து $5,102 ஆகக் கூடி இருக்கிறது.
எஸ்யுடிடி பல்கலைக்கழகத்தின் ஆகப் புதிய பட்டதாரிகள் வேலை நியமன ஆய்வு மூலம் இந்த நிலவரங்கள் தெரியவந்து இருக்கின்றன.
அந்த ஆய்வில் இந்தப் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பைச் சேர்ந்த 388 பட்டதாரிகளில் 300 பேர் உள்ளடக்கப்பட்டனர்.
பட்டதாரிகளில் 55 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை, நிதி, காப்புறுதி, அறிவியல் ஆய்வு உருவாக்கத் துறைகளில் முழுநேர வேலையைப் பெற்றனர்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெறும் புதிய பட்டதாரிகளில் முன்பைவிட அதிகமானோர் இப்போது முழுநேர வேலையையும் அதிக ஊதியத்தையும் பெறுகிறார்கள் என்பது அண்மைய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.
கொவிட்-19 தொற்றில் இருந்து மீண்டு பொருளியல் வளர்ச்சியடையத் தொடங்கியதே இதற்கான காரணம்.
முழுநேர வேலை பெற்ற புதிய பட்டதாரிகளில் தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள், உயிர் அறிவியல், பொறியியல் ஆகியவை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பட்டதாரிகளே முழுநேர வேலை பெற்றவர்களில் ஆக அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்பம் பயின்றவர்களே தொடர்ந்து அதிகம் சம்பளம் பெறுகிறார்கள்.
இவர்கள் 2021ல் வீட்டுக்கு எடுத்துச் சென்ற சம்பளம் $5,000. இது சென்ற ஆண்டில் $5,625 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலவரம் பற்றி கருத்து கூறிய இப்பல்கலைக்கழகத்தின் தலைவர் சோங் டோவ் சோங், புதிதாகப் பட்டம் பெறுவோரை முதலாளிகள் தேடி வேலையில் அமர்த்துகிறார்கள் என்பதையே வேலை நியமன ஆய்வு முடிவுகள் காட்டுவதாகக் கூறினார்.
"எஸ்யுடிடி பல்கலைக்கழகம் இளம் தலைவர்களையும் புத்தாக்க வல்லுநர்களையும் தொடர்ந்து பேணி உருவாக்கும்.
"அவர்கள் பல துறைகளை உள்ளடக்கும் வடிவமைப்புக் கல்வியைப் பெறுவார்கள்," என்று பேராசிரியர் சோங் மேலும் தெரிவித்தார்.

