சிங்கப்பூர் காவல்துறையில் முழுநேர தேசிய சேவையாளராக இருந்த ஒருவர், வழித்துணையாளராக இருந்த மாது ஒருவரிடம் தன்னுடைய பதவி அடையாள அட்டையைக் காட்டி 'ஓர் உடன்பாட்டுக்கு' வரவில்லை என்றால் அந்த மாதை பற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்போவதாகக் கூறினார்.
அந்த அட்டையைக் காட்டி அதன் மூலம் அந்தப் பெண்ணிடம் இருந்து இலவசமாகப் பாலியல் சேவையைப் பெற ஃபக்த் சிடிக்கி என்ற அந்த முழுநேர தேசிய சேவையாளர் விரும்பினார்.
கடைசியில் எந்தவித சேவையையும் அவர் பெறவில்லை. பயந்துபோன அந்த மாது தன்முகவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த தேசிய சேவையாளர் அந்த மாதின் அறையைவிட்டு வெளியேறிவிட்டார். ஒரு மாதிடம் இருந்து பாலியல் சேவைகள் வடிவில் நன்மை பெற முயன்றதாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று ஃபக்த், 20, குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு மே மாதம் 16ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் இடம்பெற்றபோது ஃபக்த் ஆர்ச்சர்ட் அக்கம்பக்க காவல் நிலையத்தில் தரைத்தள அதிகாரியாக இருந்தார்.
சென்ற ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இணைய விளம்பர தளத்தில் இருந்த ஒரு தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு அந்த மாதின் சேவை தேவை என்று கேட்டார். ஓர் ஹோட்டல் அறையில் தான் இருப்பதாகவும் தன் சேவைக்கு $400 கட்டணம் என்றும் அந்த மாது கூறினார்.
அதையடுத்து அந்த ஹோட்டல் அறைக்கு அவர் சென்றார். அறைக்குச் சென்றதும் அங்கிருந்த மாதைப் பார்த்து இணையத்தில் தான் பார்த்த மாதைப் போன்றவர் அவர் அல்ல என்று கூறி தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறிவிட்டார்.
கொஞ்சநேரத்தில் திரும்பி வந்த ஃபக்த் அந்தப் பெண்ணிடம் தனது பதவி அட்டையைக் காட்டி காவல் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தன்னுடன் ஓர் உடன்பாட்டுக்கு வரவில்லை என்றால் அந்த மாதை பற்றி காவல்துறையிடம் புகார் தெரிவித்துவிடப் போவதாகக் கூறினார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.