மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி இயக்கத்தில் தனியார் மருந்தகங்களைச் சேர்க்க இம்மாதம் முயற்சி தொடங்கியது. இதுவரை மொத்தம் 712 தனியார் மருந்தகங்கள் அந்த இயக்கத்தில் சேர்ந்து இருக்கின்றன என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று கூறினார்.
சிங்கப்பூரில் 1,200 சமூக சுகாதார உதவித் திட்ட (சாஸ்) மருந்தகங்கள் செயல்படுகின்றன என்பதை சமூக ஊடகப் பக்கத்தில் அவர் கோடிகாட்டினார்.
அந்த இயக்கத்தில் இருப் போரில் ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம், ஹெல்த்வே மருத்துவக் குழுமம் போன்ற பெரிய அமைப்புகள் எல்லாம் உள்ளடங்கும்.
அதேபோன்று, பெரிய அள விலான தொடக்க பராமரிப்புச் சேவைக் கட்டமைப்பில் உள்ள மருந்தகங்களில் பெரும்பாலானவை அவ்வியக்கத்தில் சேர்ந்து இருக்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்த இயக்கம், முதலில் குறைந்தபட்சம் 60 வயதை எட்டியவர்களுடன் ஜூலையில் தொடங்குகிறது.
குடும்ப மருத்துவர் ஒருவரை அமர்த்திக் கொள்ளும்படி குடியிருப்பாளர்களுக்கு அந்த இயக்கம் ஊக்கமூட்டும். அந்த இயக்கத்தின்கீழ் மக்கள் ஆண்டுதோறும் இலவச உடல் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
தேசிய அளவில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம். சுகாதார பரிசோதனைகளையும் செய்துகொள்ளலாம்.
இயக்கத்தின் குறிக்கோள்கள் நிறைவேற வேண்டுமானால் தனியார் மருத்துவர்கள் மிக முக்கியமானவர்கள் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
இயக்கத்தில் தனியார் மருத்துவர்கள் சேர்வதற்கு அதிகாரிகள் ஆதரவு அளிக்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவர்களை இயக்கத்தில் சேர்க்கும் ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் வருடாந்திர சேவைக் கட்டணத்தை மருத்துவர்கள் பெறுவார்கள். இதர பல நன்மைகளுக்கும் தனியார் மருத்துவர்களுக்குக் கிடைக்கும்.
மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் தனியார் மருத்துவர்களுக்கு திரு ஓங் நன்றி கூறினார். அந்த இயக்கம் காரணமாக ஒட்டுமொத்த சுகாதார நிலவரங்கள் அடிப்படையில் மாற்றம் காணும் என்று அவர் கூறினார்.
தனியார் மருத்துவர்கள், தொடக்கப் பராமரிப்புச் சேவையாளர்களின் பணி முக்கியத்துவம் பெறும். ஜூலைக்குள் மேலும் பல தனியார் மருத்துவர்கள் இந்த இயக்கத்தில் சேர்வர் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

