வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீட்டின் விலைகள் பிப்ரவரி மாத சுணக்கத்திற்குப் பிறகு சென்ற மாதம் ஏற்றம் கண்டன. மறுவிற்பனை விலைகள் முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் 0.7 விழுக்காடும் முதிர்ச்சியடையாத பேட்டைகளில் 0.5 விழுக்காடும் உயர்ந்தன.
கைமாறிய மொத்த வீடுகளில் ஐந்தறை மற்றும் எக்சகியூட்டிவ் வீடுகளின் விலைகள் ஆக அதிகமாக 1.3 விழுக்காடு அதிகரித்ததாக எஸ்ஆர்எக்ஸ் மற்றும் 99.co சொத்துச் சந்தை இணையத்தளங்களின் தரவுகள் தெரிவித்தன.
அதேநேரம் நான்கறை வீடுகளின் மறுவிற்பனை விலைகளில் 0.5 விழுக்காடும் மூவறை வீடுகளின் விலைகள் 0.3 விழுக்காடும் உயர்ந்தன. ஒட்டுமொத்தமாக, 2022 மார்ச்சுடன் ஒப்பிடுகையில் சென்ற மாதம் விலைகள் 8.3% ஏற்றம் கண்டன.
சீனப் புத்தாண்டு காலத்திற்குப் பிறகு வீடுகளை வாங்குவோர் மறுவிற்பனைச் சந்தைக்குத் திரும்பியதாலும் பிப்ரவரி மாதம் குறைவான நாள்களைக் கொண்டிருந்ததாலும் மார்ச் மாத விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்கள் என்று சொத்துச் சந்தை பகுப்பாய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
வீவக மறுவிற்பனை விலைக் குறியீட்டிலும் சென்ற மாதம் ஏற்றம் பதிவானது. மாத ஒப்பீட்டின் அடிப்படையில் 0.5 விழுக்காடு விலைகள் உயர்ந்ததாக சொத்துச் சந்தையின் முன்னணி பகுப்பாய்வாளர் நிக்கலஸ் மாக் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 2022 மார்ச் முதல் 2023 பிப்ரவரி வரையிலான 12 மாத மாதாந்திர சராசரி விலை உயர்வு 0.7% என்பதைக் காட்டிலும் இது குறைவு.
மறுவிற்பனை விலைகள் உயர்ந்ததற்கு 99.co குழுமத்தின் ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் போ யிங் குவான் சில காரணங்களைக் கூறியுள்ளார். தனியார் சொத்துகளை வாங்க வீட்டுக் கடனுக்காகக் காத்திருப்போரும் அந்த முயற்சியில் தோல்வி யடைந்தோரும் வீவக மறுவிற்பனை வீடுகளின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஐந்தறை மற்றும் எக்சகியூட்டிவ் வீடுகளை தனியார் வீடுகளுக்கு மாற்றுத் தெரிவாக அவர்கள் எடுத்துக்கொண்டதால் மாத அடிப்படையிலான மறுவிற்பனை விலைகள் மார்ச் மாதம் ஏறியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், வீவக மறுவிற்பனை வீடுகளின் விற்பனையும் சென்ற மாதம் உயர்ந்தது. பிப்ரவரியில் 1,849 வீடுகள் கைமாறிய நிலையில், சென்ற மாதம் அந்த வீடுகளின் எண்ணிக்கை 2,287க்கு அதிகரித்தது. இது 23.7 விழுக்காடு ஏற்றம்.
வரவுசெலவுத் திட்டத்தில், முதல்முறை மறுவிற்பனை வீடு வாங்குவோருக்கு மசே நிதி வீடமைப்பு மானியம் அறிவிக்கப்பட்ட பின்னர் வீவக மறுவிற்பனை வீடுகளின் விற்பனை மார்ச் மாதம் சூடுபிடிக்கத் தொடங்கியதாக ஆரஞ்ச்டீ அண்ட் டை சொத்துச் சந்தை நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு துணைத் தலைவர் கிறிஸ்டின் சன் தெரிவித்துள்ளார்.

