புனிதவெள்ளியான இன்றுமுதல் நீண்ட வாரவிடுமுறை வருவதால் மலேசியா செல்லக்கூடிய வாகனமோட்டிகள் நேற்று போக்குவரத்து நெரிசலில் சிரமப்பட்டனர். அதனால் அவர்களின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது.
ஜோகூருக்கு இட்டு செல்லும் சிங்கப்பூரின் இரு சோதனைச் சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துவாஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதை நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் 'ஒன்மோட்டோரிங்' இணையத்தளத்தின் நேரடி ஒளிபரப்பில் காணமுடிந்தது.
கடற்பாலம் வழியாக ஜோகூர் செல்லக்கூடிய பயணிகள் நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரையிலான தாமதத்தை எதிர்நோக்கலாம் என்று 'பீட் த ஜேம்' என்னும் கைப்பேசி செயலி காட்டியது.
துவாஸில், போக்குவரத்து நெருக்கடி மூன்று மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரைஇருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டது.
இன்றைய புனிதவெள்ளி பொதுவிடுமுறையோடு ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கிய pfங் மிங் திருவிழாவும் போக்குவரத்து நெரிசலுக்கான காரணமாக இருக்கலாம்.
இதற்கிடையே, சிங்கப்பூரின் சோதனைச் சாவடி ஆணையம் ஓர் ஆலோசனைக் குறிப்பை வெளியிட்டது. தாமதம் எதிர்பார்க்கப்படுவதால் பயணிகள் தங்களது பயணத்தைத் தொடங்கும் முன்னர் போக்குவரத்து நிலவரத்தைக் கவனத்தில் கொள்ளவும்," என்று அந்தக் குறிப்பு கூறியது.
முன்னதாக, இரு சோதனைச்சாவடிகளிலும் கடுமையான நெரிசல் இருப்பதாக முற்பகல் 11 மணியளவில் ஆணையம் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தது.