சிங்கப்பூரின் நீதித்துறையின் நம்பகத்தன்மையைப் பற்றி கேள்வி எழுப்பி பொது வெளியில் கடிதம் எழுதிய ஆஸ்திரேலிய குடிமகள் ஒருவரின் கட்டுரையை தனது 'தி ஒன்லைன் சிட்டிஸன்' (டிஓசி) சமூக அரசியல் இணையத்தளத்தில் மீண்டும் பயன்படுத்திய அதன் முதன்மை ஆசிரியர் டெர்ரி சூவுக்கு (படம்), நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று $18,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அந்தக் கட்டுரையையும் அது தொடர்பான இணையவாசிகளின் கருத்துகளையும் திரு சூ, தனது இணையத்தளத்திலிருந்து அகற்றும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்தக் கட்டுரையும் கருத்துகளும் நேற்று அகற்றப்பட்டன.
திருவாட்டி ஜூலி ஓ'கோனர் தனது வலைப்பதிவில் எழுதிய அக்கட்டுரையை, 2021, ஜனவரி 27ஆம் தேதியன்று திரு சூ, தனது இணையத்தளத்தில் சில திருத்தங்களுடன் பதிவேற்றம் செய்தார். மேலும் அவர் டிஓசியின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்தார். இருப்பினும், அந்தக் கட்டுரை அத்தளத்திலிருந்து இவ்வாண்டு அகற்றப்பட்டது.
நேற்று தனது தீர்ப்பை வெளியிட்டு பேசிய நீதிபதி ஹூ ஷியவ் பெங், "பொறுப்பான முறையில் செய்தித்துறையைக் கையாள திரு சூ தவறிவிட்டார். மாறாக, சிங்கப்பூர் நீதிமன்றங்களைப் பற்றி அவதூறு கூறும் கட்டுரையைப் பதிவேற்றம் செய்து டிஓசி வாசகர்களைத் திசைதிருப்ப முயன்றார்.
"அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்கும்போது, சிங்கப்பூர் நீதிமன்றங்கள் பணம் படைத்த, பதவியுள்ள, நீதிபதிகளுடன் தொடர்புள்ள ஒருவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கும். நீதியை நிலைநிறுத்த கடப்பாடு கொண்டிருக்கும் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவதில்லை. வழக்குகள் அதன் உண்மைத்தனத்துக்காக தீர்ப்பளிக்கப்படுவது இல்லை. மாறாக அரசியல் காரணங்களை ஒட்டி அவற்றின் தீர்ப்புகள் அமைந்துள்ளன முதலிய கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
"மேலும் சிங்கப்பூரின் நீதித்துறை சுதந்திரமாக, நேர்மையாக, பாரபட்சமின்றி தீர்ப்பளிப்பதில்லை என்றும் இது மக்கள் நீதித்துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கீழறுக்கிறது," என்று கூறப்பட்டுள்ளது என்றும் நீதிபதி ஹூ விவரித்தார்.

