சமிக்ஞை முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று வட்டப்பாதை எம்ஆர்டி ரயில் சேவை இரண்டு மணி நேரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது. ரயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் பேருந்துகளில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தனர்.
இவ்வாண்டில் முதல் முறையாக நிகழ்ந்த இந்த சேவைத் தடையில் ஒரு கட்டத்தில் நாற்பது நிமிடத்திற்கு மேல் ரயில் தாமதமானதால் பயணிகள் திக்கு முக்காடினர். டோபிகாட்/மரினா பே நிலையத்துக்கும் பாய லேபார் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையே ரயில்கள் வந்து சேர்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பயணத்துக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கும்படி பயணிகளை ரயில்வே நிறுவனமான எஸ்எம்ஆர்டி பிற்பகல் ஒரு மணியளவில் டுவிட்டர் பதிவில் கேட்டுக்கொண்டது.
பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளைக் குறைப்பதற்காக அந்நிறுவனம் பாதிக்கப்பட்ட எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே சிறப்பு இலவசப் பேருந்து சேவைகளை வழங்கியது. பயணிகள் மாற்று ரயில் தடம் வழியாகச் செல்லவும் அது அறிவுறுத்தியது. பயணிகள் பேருந்தில் ஏறிச் செல்வதற்காக பல ஊழியர்கள் வழிகாட்டி உதவி செய்தனர்.
பிற்பகல் 2.50 மணியளவில் டோபிகாட்/மரினா பே நிலையங்களுக்கு இடையே இடையூறு குறைந்ததாக எஸ்எம்ஆர்டி அறிவித்தது. ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதும் 3.15 மணியளவில் இலவசப் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
ரயில் சேவை பாதிப்பில் சிக்கிக்கொண்டவர்களில் பீஷானிலிருந்து புரோமனேட் சென்ற நடாஷா இர்ஷாத்தும் ஒருவர்.
"இன்று பொது விடுமுறையாக இருந்ததால் மக்கள் அவ சரப்படவில்லை என நினைக்கிறேன். வேலை நாளாக இருந்தால் பயணிகள் நிலைகுலைந்து போயிருப்பார்கள்," என்று அவர் கூறினார்.
எஸ்எம்ஆர்டி பின்னர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்தச் சம்பவம் முழுவதும் ரயில்கள் இயங்கின.
"ஆனால் ரயில்கள் மெதுவாகச் சென்றதால் நீண்ட நேரமாகியது," என்று தெரிவித்தது. பயணிகளிடம் அது மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.