மோனலிசா
புனித வெள்ளியான நேற்று, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்ததை சிங்கப்பூர் கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி தங்களுடைய பாவங்களுக்கான நிவர்த்தியையும் பெற்றுகொண்ட மன்னிப்பையும் அனுசரித்தனர்.
கொவிட் கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்ந்துள்ள சூழலில் இவ்வாண்டின் புனித வெள்ளி வழிபாட்டு முறைகள் வழக்க நிலையில் அனுசரிக்கப்பட்டது.
"காலை 10.30 மணிக்கு தொடங்கிய தமிழ் ஆராதனையில் 'முடிந்தது' எனும் தலைப்பிலான பிரசங்கம் நடைபெற்றது. இவ்வாண்டு மக்களுக்கு ஆழ்ந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வசனங்கள் மிகவும் மெதுவாக வாசிக்கப்பட்டன," என்று கூறினார் ஈசூன் கிறிஸ்துவ தேவாலயத்தின் குருவானஅருட்திரு இஸ்ரவேல் செல் வம், 49.
"இயேசு தன்னுடைய தாழ்மையை வெளிப்படுத்த சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவுகூரும் விதமாக தேவாலயங்களில் குருவானவர்கள் மக்களின் பாதங்களை கழுவும் வழிபாட்டு அங்கம் கொவிட் காலங்களுக்கு பின் இவ்வாண்டு மீண்டும் தொடங்கியது," என்று கூறினார் ஜாலான் காயு வட்டாரத்தில் உள்ள பிரசன்ன தேவாலயத்தின் தலைமை குருவானவர் (பொறுப்பு) அருட்திரு எடிசன் நேசகுமார் வில்சன், 60.
"மக்கள் வழிபாட்டு ஆராதனைகளில் மனநிறைவுடன் பங்கு கொண்டனர்," என்று ஷார்ட் ஸ்திரீட் தமிழ் மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் குருவான அருட்திரு ஜேம்ஸ் நகுலன் கூறினார்.
இதனையொட்டி பிள்ளை களுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும், பொழுபோக்கு அங்கங்களும் சனிக்கிழமையன்று (இன்று) மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேவாலயத்தின் சமூக மன்றத்தில் நடைபெறவுள்ளன என்றும் இவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒன்றாக கூட்டத்தில் கலந்துகொண்டது நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளித்தது" என்று கூறினார் பூன் லே பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசி தேவாலயத்தின் தொண்டூழியரான பென்சி கலா, 47.
புனித வெள்ளி அன்று இயேசுவின் மரணத்திற்குப் பிறகு மூன்றாம் நாளான ஈஸ்டர் ஞாயிரின்போது அவரின் உயிர்த்தெழுதலைக் கிறிஸ்துவர்கள் கொண்டாடுவார்கள்.

