போலி வங்கிக் கணக்கு திறப்பது போன்ற பல்வேறு மோசடிகளுக்கு சிங்பாஸ் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் களத்தில் இறங்கி உள்ளன.
தேவை ஏற்பட்டால், குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக அல்லது இணையப் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக சிங்பாஸ் செயலியால் சேகரிக்கப்படும் தரவு பயன்படுத்தப்படலாம் என்று அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகம் நேற்று தெரிவித்தது.
இது குறித்து சிங்பாஸ் பயனாளர்களுக்கு அந்தச் செயலி மூலம் தெரிவிக்கப்பட்டுவிட்டது.மோசடிப் பேர்வழிகள் சிங்பாஸ் விவரங்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் மத்திய சேமநிதிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது அல்லது வங்கிக் கணக்குகள் திறப்பது போன்ற பல்வேறு இணைய மோசடிகளைத் தடுத்து நிறுத்த இந்த புதிய மாற்றங்கள் உதவும் என்று அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மோசடி நடவடிக்கைகள் பற்றி தெரியவரும்போது, அது எந்த நேரத்தில் நடந்தது போன்ற முக்கியத் தகவலை சிங்பாஸ், காவல்துறை, மத்திய சேமநிதிக் கழகம், வங்கிகள் தெரிவிப்பதன் மூலம் அந்த மோசடி உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்படும் என்றார் அந்தப் பேச்சாளர்.
"தேவை ஏற்பட்டால், சிங்பாஸ் குழு, பயனாளரைப் பாதுகாக்கும் பொருட்டு அவரது சிங்பாஸ் கணக்கைத் தற்காலிகமாக நிறுத்தி, அதுபற்றி அவருக்குத் தெரியப்படுத்தும்.
"சிங்பாஸ் தொடர்பான ஆகக் கடைசி விவரங்கள், டிரேஸ்டு கெதர் செயலியுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை. ஆக, அது இடம் பற்றிய தரவை சேகரிக்காது. மாறாக, அது அதைப் பயன்படுத்துபவரின் ஐபி முகவரியை மட்டும் கண்காணிக்கும். அந்தச் செயல்பாடு உள்ளூரில் நடத்தப்பட்டதா வெளியூரில் நடத்தப்பட்டதா என்பதை அது நிர்ணயிக்கும். அதன் மூலம் பயனாளர் சிங்பாஸின் வெளிநாட்டுப் பயன்பாட்டைத் தடுக்கலாம்," என்றும் பேச்சாளர் மேலும் விளக்கினார்.
டிரேஸ்டுகெதர் செயலியில் தரவு சேகரிப்பு தொடர்பில் 2021ல் பெரும் சர்ச்சை கிளம்பியது. பயனாளர் எங்கு இருக்கிறார் எனும் தரவு குற்றவியல் புலனாய்வுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அது கொவிட்-19 தொடர்புகளின் தடங்களைக் கண்டறிதலுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்படும் என்று முன்னதாகக் கூறப்பட்டது. தொடர்புகளின் தடங்களைக் கண்டறிதல் தளர்த்தப்பட்டதால் அது இவ்வாண்டு பிப்ரவரியில் நிறுத்தப்பட்டது.
சிங்பாஸைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்தவும் தங்கள் சிங்பாஸ் விவரங்களை மோசடிப் பேர்வழிகளிடம் பயனாளர்கள் விற்பதைத் தடுக்கவும் சிங்பாஸ் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் தெரிவித்தன.
சிங்பாஸை இங்கு குறைந்தது நான்கு மில்லியன் பேர் அல்லது உள்ளூர்வாசிகள், நிரந்தரவாசிகளில் 97 விழுக்காட்டினர் பயன்படுத்துகிறார்கள் என்று அச்செயலியின் மேம்பாட்டாளர்கள் கூறினர். அதன் மூலம் ஆண்டுக்கும் குறைந்தது 300 மில்லியன் பரிவர்த்தனைகள் அரசாங்கம் வழங்கும் மின்னிலக்க சேவைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்ட தனியார் அமைப்புகளின் சேவைகளுக்கும் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்கட்டணம் செலுத்தப்பட்ட உள்ளூர் கைப்பேசி எண்களுக்கான சிம் அட்டைகளுக்குப் பதிவு செய்வதற்கும் சிங்பாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது. அதை கொண்டு மோசடிக்காரர்கள் +65 என்ற எண்ணுடன் தொடங்கும் எண்ணைப் பயன்படுத்தி மோசடி அழைப்புகளை மேற்கொள்ளலாம். இத்தகைய மோசடி எண்களிலிருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று காவல்துறை ஆலோசனை கூறுகிறது.

