செய்திக்கொத்து

2 mins read
14bc0219-823d-40b6-8df3-e4e47283b31f
-

தோ பாயோ வீட்டில் எலும்பு எச்சங்கள்: திறந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதி

தோ பாயோவில் உள்ள ஒரு வீட்டுக்கு ஈராண்டுகளுக்கு மேல் வாடகை செலுத்தாமல் இருந்ததால், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அதிகாரிகள் அந்த வீட்டுக்கு எட்டு முறை சென்று வந்தனர். எந்தப் பலனும் இல்லாத தால், வீட்டைக் கையகப்படுத்த வீவக முடிவு செய்தது. கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி அந்த வீட்டின் கதவைப் பலவந்தமாக திறந்து பார்க்கையில் அங்கு அடையாளம் தெரியாத ஒருவரின் எலும்பு எச்சங்களைப் பார்த்தனர்.

இந்த வழக்கின் தொடர்பில் அரசாங்க மரண விசாரணை அதிகாரி ஆதம் நக்கோடா நேற்று முன்தினம் திறந்த தீர்ப்பு வழங்கினார். திறந்த தீர்ப்பு என்பது செயற்கை மரணத்தை உறுதி செய்யும் அதேவேளையில் காரணத்தைக் குறிப்பிடாத தீர்ப்பாகும். மரபணுச் சோதனையின் மூலம் அந்த எலும்பு எச்சங்கள் அந்த வீட்டில் வசித்த 73 வயது திருவாட்டி செங் ஆ இம்மினுடையது என்று குறிப்பிட்டாலும் அதை உறுதிப் படுத்த முடியவில்லை என்றார் நீதிபதி ஆதம்.

திருவாட்டி செங், தோ பாயோ, லோரோங் 7ல் உள்ள புளோக் 15ன் நான்காம் மாடியில் உள்ள வீட்டில் 2016 வரை தமது சகோதரருடன் வசித்து வந்தார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அவர் 2020 மார்ச் மாதத்தில் கடைசியாக அந்த வீட்டுக்கு வாடகை செலுத்தியுள்ளார்.

இந்த மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவுமில்லை என்று காவல்துறை ஏற்கெனவே கூறியுள்ளது.

பாதுகாப்புக் குறைபாடு குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இருவர் விடுதலை

பாதுகாப்புக் குறைபாடு குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இரண்டு ஆடவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு உள்ளனர். அப்படி என்றால் ஓங் ஹான் பெங், ரோட்னி இயோ குவாங் சிங் எனும் 51 வயது ஆடவர்கள் மீது வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்படி மீண்டும் குற்றம் சாட்ட முடியாது. 2019 ஜூன் 9ஆம் தேதியன்று, ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ் எனும் 63 மாடிக் கட்டடத்தின் உச்சியில் உள்ள 'ஒன் அல்டிடியுட்' மதுபானக் கூடத்திலிருந்து நான்கு மீட்டர் ஆழமான குழியில் விழுந்து, தலைக் காயங்கள் காரணமாக மாண்டார் 26 வயது ஷோன் டுங் மன் ஹோன்.

சம்பவம் நடந்தபோது திரு இயோ, அந்தக் கட்டடத் தின் மேம்பாட்டாளரான ஓயுபி செண்டரின் இயக்குநராக இருந்தார். திரு ஓங், அந்த மதுபானக் கூடத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தார். மதுபானக் கூடத்துக்கு அருகில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்த தால், அங்கு முறையான பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளனவா என்பதை இருவரும் உறுதிப்படுத்த தவறி விட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.