ஆர்ச்சர்ட் ரோட்டில் இருக்கும் கன்கார்ட் ஷாப்பிங் மால் கட்டடத்திற்கு வெளியே உள்ள படிக்கட்டில், மார்ச் 26ஆம் தேதி முகம்மது அஸ்ஃப்ரே அப்துல் காஹா, 27, என்பவர், திரு தேவேந்திரன் சண்முகம், 34, என்பவரைப் பிடித்துத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
திரு தேவேந்திரன் பின்பக்கமாக விழுந்ததால் அவரின் கபாலத்தில் பல எலும்புகள் முறிந்துவிட்டன. அந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஒரு வாரம் கழித்து கடந்த புதன்கிழமை திரு தேவேந்திரன் மரணமடைந்துவிட்டார். அவரின் நல்லுடல் வெள்ளிக்கிழமை மண்டாய் தகனச் சாலையில் தகனம் செய்யப்பட்டது.
வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்ததாக அஸ்ஃப்ரே மீது, சம்பவம் நிகழ்ந்ததற்கு அடுத்த நாளன்று குற்றம் சுமத்தப்பட்டது. குற்றவாளி என்று தீர்ப்பானால் அஸ்ஃப்ரேவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, பிரம்படி, அல்லது அபராதம் விதிக்க முடியும்.
அஸ்ஃப்ரே இதர குற்றச்செயல்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். தண்டனை முடிவதற்கு முன்னதாகவே தண்டனை குறைப்பு உத்தரவின்பேரில் அவர் வெளியே விடப்பட்டு இருந்தார்.
அப்போது அவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
விடுதலையாகாத நிலையில் இருந்தபோது குற்றத்தைச் செய்து இருக்கிறார் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால் அஸ்ஃப்ரே கூடுதலாக 178 நாள்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.