2022ல் மொத்தம் 31.9 மில்லியன் அனைத்துலகப் பயணிகள் கடந்து சென்றனர்
சாங்கி விமான நிலையம், அனைத்துலக பயணிகள் போக்கு வரத்தைப் பொறுத்தவரை சென்ற ஆண்டில் உலகின் ஆக சுறுசுறுப்புமிக்க 10 விமான நிலையங்களில் ஒன்றாக மீண்டும் இடம்பெற்று இருக்கிறது.
சாங்கி நிலையம் ஒன்பதாவது ஆக சுறுசுறுப்புமிக்க நிலையமாக திகழ்கிறது என்று அனைத்துலக விமான நிலைய உலக மன்றம் என்ற அமைப்பு வரிசைப்படுத்தி இருக்கிறது.
சாங்கி நிலையத்தை சென்ற ஆண்டில் மொத்தம் 31.9 மில்லியன் பயணிகள் கடந்து சென்ற னர். அனைத்துலக விமான நிலைய உலக மன்றம் பட்டியலில் இடம்பிடித்து இருக்கும் ஒரே ஆசிய விமான நிலையம் சாங்கிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் துபாய் அனைத்துலக விமான நிலையம் 66 மில்லியன் உலகப் பயணிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
லண்டன் ஹீத்ரோ (58.2 மில்லியன் பயணிகள்), ஆம்ஸ்டர்டாம் (52.5 மில்லியன் பயணிகள்) ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.
கொவிட்-19க்கு முன்னதாக அனைத்துலகப் பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை உலகின் ஏழாவது ஆக சுறுசுறுப்புமிக்க விமான நிலையமாக சாங்கி இருந்தது. 2019ல் சாதனை அளவாக அது 68.3 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.
கொவிட்-19 காரணமாக எல்லைகள் மூடப்பட்டதால் 2021ல் சாங்கி 95வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
அனைத்துலகப் பயணம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. சென்ற ஆண்டில் உலகப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது என்பது இந்த உலக மன்றத்தின் முதல் கட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
இதை 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், 53.5 விழுக்காடு பயணிகள் போக்குவரத்து அதிகரித்து இருப்பது தெரியவருகிறது.
அனைத்துலகப் பயணிகள் போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக கொவிட்-19க்கு முந்தைய நிலையை எட்டி வருகிறது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் பயணிகள் போக்குவரத்து 89.7 விழுக்காட்டு அளவுக்குத் திரும்பிவிட்டது என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
சாங்கியில் இப்போது பயணிகளின் போக்குவரத்து அளவு, விமானச் சேவைகள், நகர தொடர்புகள் எல்லாம் கொவிட்-19க்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 80% அளவுக்குத் திரும்பி இருக்கின்றன என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் சென்ற மாதம் தெரிவித்தார்.
சாங்கி பயணிகள் போக்குவரத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை 2024ல் அல்லது அதற்கு முன்னதாகவே எட்டிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

