சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக், இந்தியாவின் 'மணிப்பால் ஹெல்த் எண்டர்பிரைசஸ்' நிறுவனத்தில் மேலும் 41 விழுக்காட்டுப் பங்கை வாங்குகிறது.
இதன்மூலம் இந்தியாவின் ஆகப் பெரிய மருத்துவக் குழுமமான மணிப்பால் ஹெல்த் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தெமாசெக்கின் பங்கு 59 விழுக்காடாக அதிகரிக்கும்.
அந்த முதலீட்டு நிறுவனம் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
இந்த உடன்பாட்டின் மதிப்பு சுமார் US$2 பில்லியன் (S$2.66 பில்லியன்) என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கொள்முதலுக்குப் பிறகு மணிப்பால் குழுமம் அந்த இந்திய நிறுவனத்தில் சுமார் 30 விழுக்காட்டுப் பங்கைக் கொண்டிருக்கும்.
தெமாசெக்கிற்கு முற்றிலும் உரிமையான, சுதந்திரமாகச் செயல்படக்கூடிய நிறுவனமான 'ஷியர்ஸ் ஹெல்த்கேர் குரூப்' என்ற நிறுவனம், தன்னுடைய இப்போதைய 18 விழுக்காட்டு பாத்தியதையைத் தொடர்ந்து வைத்திருக்கும்.
டிபிஜி என்ற மாற்று சொத்து நிர்வாக நிறுவனம், முற்றிலும் விலகிக்கொள்ளும். இருந்தாலும் அது தன்னுடைய புதிய ஆசிய நிதி அமைப்பான 'டிபிஜி ஆசியா VIII' என்ற அமைப்பின் வழியாக அந்த இந்திய மருத்துவமனைக் குழுமத்தில் 11 விழுக்காட்டு பாத்தியதை வைத்திருக்கும்.
'தேசிய முதலீட்டு உள்கட்டமைப்பு நிதி' என்ற அமைப்பு அந்த இந்தியக் குழுமத்தில் இருந்து விலகிவிடும்.
இந்தியாவின் வாய்ப்புகளைத் தான் தொடர்ந்து நாடி வருவதாக தெமாசெக் தெரிவித்தது.
இதனிடையே, இதுபற்றி கருத்து கூறிய மணிப்பால் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரஞ்சன் பாய், தெமாசெக் கணிசமான அளவில் பங்கு வாங்குவது குறித்து தங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறினார்.
மணிப்பால் குழுமம் இந்தியாவில் 16 நகர்களில் 29 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. அவற்றில் 4,000 மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள்.
ஆண்டு ஒன்றுக்கு 5 மில்லியனுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இப்போது அது சேவை வழங்கி வருகிறது.

