ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அன்பளிப்புப் பைகள் கொடுக்கப்படுவதாக சமூக ஊடகத்தில் பல பதிவுகளும் பல செய்திப் பக்கங்களும் இடம்பெற்று வருகின்றன.
ஆனால், அவை எல்லாம் மோசடி வேலை என்று ஃபேர்பிரைஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
அப்படி எந்தவொரு அன்பளிப்புப் பையையும் ஃபேர்பிரைஸ் கொடுக்கவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை என்று ஃபேஸ்புக்கில் அந்த நிறுவனம் தெரிவித்தது.
'என்டியுசி ஃபேர்பிரைஸ் ஃபேன்ஸ்' என்ற ஃபேஸ்புக் பதிவு நேற்றுக் காலை வெளியானது.
அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதி அனுப்புவோருக்கு 500 அன்பளிப்புப் பைகள் கிடைக்கும் என அப்பதிவு கூறியது.
அன்பளிப்புப் பையைப் பெற வேண்டுமானால் ஓர் இணைப்பைப் பயன்படுத்தி பயனீட்டாளர்கள் தங்களைப் பதிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனிடையே, நேற்று மாலை 6 மணியளவில் 1,300க்கும் மேற்பட்டவர்கள் அந்தப் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
அந்த மோசடி பற்றி கருத்து கூறிய ஃபேர்பிரைஸ், வாசகர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை எல்லாம் சரிபார்த்து செயல்பட வேண்டும்.
அதற்கு முன்னதாக சொந்தத் தகவல்களைத் தெரிவிக்கக் கூடாது என்று கூறியது.
ஏதாவது விளம்பரங்களைத் தான் மேற்கொண்டால் அதுபற்றி தனது அதிகாரபூர்வ இணையத் தளத்திலும் சமூக ஊடகத்திலும் மட்டும் தகவல்கள் வெளியாகும் என்றும் ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.

