தமது அமைச்சின் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங்
துல்லிய மருத்துவம், செயற்கை நுண்ணறிவு போன்ற மருத்துவ அறிவியலில் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு சிங்கப்பூர் ஆதரவளித்து, அவற்றை அரவணைக்க வேண்டும். ஆனால், அவற்றின் இடர்களையும் ஆபத்துகளையும் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
மருத்துவ அறிவியலில் பெரிய அளவிலான மேம்பாட்டிற்கான காலகட்டம் இது என்றார் அவர். அதேவேளையில், சோதனை முறை சார்ந்த சிகிச்சைகள் பெருகும் நிலை ஏற்படலாம் என்று திரு ஓங் சொன்னார்.
சோதனை முறை சார்ந்த சிகிச்சைகள் சிறுபான்மையினரிடம் மட்டும் வேலை செய்யும். எனவே, புதிய சிகிச்சைகளைப் பெரிய அளவில் செயல்படுத்துவது, ஆதார அடிப்படையிலான மருத்துவ மேம்பாட்டையும் மருத்துவ ஆக்ககரத்தையும் செலவு மதிப்பீட்டையும் பொறுத்து உள்ளது என்று அவர் விவரித்தார்.
14வது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணையின் தொடக்கத்தைக் குறிக்கும் அதிபரின் உரையைத் தொடர்ந்து, தமது அமைச்சின் பிற்சேர்க்கையில், திட்டங்களை திரு ஓங் கோடிட்டுக் காட்டினார்.
மருத்துவத் தொழில்நுட்பம் நிலைநாட்டப்பட்டாலும், அது விலையுயர்ந்ததாக இருப்பதோடு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அது பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
"அதன் பொருட்டு, சுகாதாரப் பராமரிப்புக்கு நிதி வழங்குவது தொடர்பிலான கொள்கைகள் குறித்து மறுசிந்தனை செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக, மருத்துவக் காப்புறுதி, மெடிஷீல்ட் லைஃப் போன்றவற்றின் பங்கு பற்றி மறுபரிசீலனை தேவை," என்று அவர் கூறினார்.
துல்லிய மருத்துவம் போன்ற புதிய மருத்துவத் தொழில்நுட்பத்தின் செயல்பாட்டில் அறநெறித் தரநிலைகளைப் பாதுகாக்க புதிய விதிமுறை தேவைப்படலாம் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்வுகளால் ஏற்படும் பலன்களைப் பெற, ஆய்வாளர்கள், மருத்துவர்கள், பொருளியல் நிபுணர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பங்காளித்துவ முயற்சியில் சுகாதார அமைச்சும் ஈடுபடும் என்றார் திரு ஓங்.
மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதும் திரு ஓங்கின் அமைச்சின் திட்டங்களில் ஒரு முக்கிய அம்சமாகும். நோய் வருமுன் காக்கும் பராமரிப்பின் மூலம் சிங்கப்பூர் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வரும் ஆண்டுகளில் கவனம் செலுத்தப்படும்.
கருவுற்றிருக்கும்போதே கர்ப்பிணிகளையும் அவர்களின் வாழ்க்கைத் துணைகளையும் இலக்காகக் கொண்டு சுகாதார முயற்சிகளை முன்னெடுப்பது, பள்ளிகளில் சுகாதாரக் கல்வியைச் சேர்க்க பிற அமைச்சுகளுடன் இணைந்து பணியாற்றுவது, 'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டம் மூலம் பெரியவர்கள் தங்கள் சுகாதாரத்தைப் பேண ஊக்குவிப்பது உள்ளிட்டவை அந்த முயற்சிகளில் அடங்கும்.
இவ்வாறு செய்வதால் பெரியவர்களுக்கு வயது ஏறும்போது, சமூகத்தில் அவர்களால் நல்ல வகையில் மூப்படைய முடியும்.
அந்திமகாலப் பராமரிப்புக்கான ஆதரவும் வலுப்படுத்தப்படும் என்று திரு ஓங் சொன்னார். தங்கள் வீடுகளிலேயே இறக்க விரும்பும் பெரும்பாலானோரின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.
எங்கு பராமரிப்பு நாடப்பட்டாலும் அதற்கான ஆதரவு இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று திரு ஓங் கூறினார்.

