பெரியவர்கள் பயிற்சி பெறவும் பலவற்றைக் கற்றுக்கொள்ளவும் அவர்களின் வாழ்நாள் முழுவதற்கும் மேலும் வாய்ப்புகள் வழங்கப்படும்.
இதற்குத் தோதாக கல்வி அமைச்சு பல முயற்சிகளை எடுக்கிறது. மாறிவரும் உலகச் சூழலில் சிங்கப்பூரர்கள் போட்டித்திறனுடன் திகழ உதவுவது அந்த முயற்சிகளின் நோக்கம்.
சிங்கப்பூரின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் இடம்பெறவிருக்கின்றன.
பெரியவர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் கற்றுக்கொள்வோருக்குப் புதிய கற்பித்தல் வழிகளை உருவாக்குவதும் அந்தத் திட்டங்களில் அடங்கும்.
நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், பயிற்சி நிலையங்களுடன் அணுக்கமாகச் சேர்ந்து செயல்பட்டு தொழில்துறை தேவைகளுக்கும் ஊழியர் அணியின் தேர்ச்சி, பயிற்சிக்கும் இடையில் பொருத்தமான நிலையை உருவாக்குவதும் திட்டங்களில் உள்ளடங்கும்.
பணியிடைக்கால ஊழியர்களுக்குக் கல்வி அமைச்சு வலுவான ஆதரவை வழங்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங், அதிபர் உரையில் இடம்பெற்றிருக்கும் தமது அமைச்சின் பிற்சேர்க்கையில் தெரிவித்து இருக்கிறார்.
கல்வி அமைச்சர் சான், தமது அமைச்சின் முன்னுரிமைகளை கோடிட்டு காட்டினார்.
சிறப்புக் கல்வி உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு அமைச்சு தன்னுடைய ஆதரவை வலுப்படுத்தும். சமூக சேவை அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு சிறப்புக் கல்விப் பள்ளிக்கூடத் துறையில் வாழ்க்கைத்தொழில் முன்னேற்றங்களையும் ஊதியத்தையும் அமைச்சு மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருமித்த கவனம் செலுத்தப்படும் மற்றொரு துறை தொழில்நுட்பம் என்று திரு சான் கூறினார்.
பல நிலையிலான ஆற்றல்களுடன்கூடிய மாணவர்கள் கற்றுக்கொள்வதும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தேவைக்கேற்ப சரிசெய்யப்படும்.
பல்வேறு பின்னணிகளைக் கொண்டவர்கள் ஒருவர் மற்றொருவருடன் கலந்துறவாடுவதற்கான முயற்சிகள் அதிகரிக்கப்படும்.
பாலர்பள்ளி கல்வியில் அமைச்சு தொடர்ந்து அதிக முதலீட்டை செய்யும். குறிப்பாக சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அதிக உதவி கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
குடும்பங்களுக்கு ஆதரவு
இந்த முயற்சிகளுக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் உறுதுணையாக இருக்கும். இதன்மூலம் எல்லாரையும் உள்ளடக்கும் சமூகம் சாதிக்க உதவி கிடைக்கும்.
குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 2022 நவம்பர் மாதம் ஒரு தேசிய திட்டம் தொடங்கப்பட்டது.
'குடும்பங்களுக்கான சிங்கப்பூர் தயாரிப்பு 2022' என்ற அந்தத் திட்டத்தை தமது அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
'அனைத்து நகர்களிலும் ஆயுளுக்கும் குடும்பம்' என்ற இயக்கம் 2025ல் இடம்பெறும். அதை அடுத்து குடும்ப ஆதரவு சேவைகளுடன் சேர்ந்து குடும்பங்களுக்குப் பல்வேறு உதவிகள் கிடைக்கும்.
அதிக சவால்களை எதிர்நோக்குவோருக்கு திருமண, மணவிலக்கு ஆதரவு, குடும்ப ஆலோசனை ஆகியவை கிடைக்கும்.
இவை குடும்ப சேவை நிலையங்கள் அமல்படுத்தும் குடும்பங்களைப் பலப்படுத்தும் செயல்திட்டத்தின் மூலம் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
குறைந்த வருமான குடும்பங்களைக் கைதூக்கிவிடுவதற்கான முயற்சிகளையும் திரு மசகோஸ் கோடிட்டுக் காட்டினார்.
இடர்களை எதிர்நோக்கும் தனிப்பட்டவர்களுக்கும் கிடைக்கக்கூடிய உதவிகள் பற்றி அவர் குறிப்பிட்டார்.
வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும்
வேலைகளைப் பொறுத்தவரை சிங்கப்பூரர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும்.
எளிதில் பாதிக்கக்கூடிய ஊழியர்களுக்கான ஆதரவு பலப்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் குறிப்பிட்டார்.
போட்டித்திறனுடன் காலத்திற்கு ஏற்றவாறு திகழ்வது பற்றி பலரும் கவலையடைகிறார்கள்.
அதோடு மட்டுமன்றி தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற வேலைகள் கிடைக்குமா என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
இதைப் பொறுத்தவரை தனிப்பட்ட சிங்கப்பூரர்கள் வேலை உருமாற்ற வழிகாட்டித் திட்டத்தை தங்களுக்கு உதவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அந்தத் திட்டத்தை மனிதவள அமைச்சு நடைமுறைப்படுத்தி வருகிறது.
நிறுவன தலைமைத்துவ பதவிகளுக்கு வலுவான உள்ளூர் தலைவர்களைப் பலப்படுத்துவது மற்றொரு நோக்கம் என்றும் டாக்டர் டான் குறிப்பிட்டார்.
குறைந்த வருமான ஊழியர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தொழிலில் உயர உதவுவது, முதியோர், உடற்குறையாளர்கள், முன்னாள் குற்றவாளிகள் போன்றவர்கள் வேலை பெறுவதற்கான வழிகளை உறுதிப்படுத்துவது ஆகியவை மனிதவள அமைச்சு ஒருமித்த கவனம் செலுத்தும் இதர துறைகள் என்று அவர் குறிப்பிட்டார்.
ஓய்வுக்காலத்தில் போதிய நிதிவளம் இருப்பதை உறுதிப்படுத்தும் தன் கொள்கைகளை அடிப்படை ரீதியில் அமைச்சு மறுபரிசீலனை செய்து வருகிறது என்றும் டாக்டர் டான் தெரிவித்தார்.