எஃப்1 கார் பந்தயம் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளன. ஆனால், பந்தயம் நடைபெறும் மரினா பே வட்டாரத்தில் அமைந்துள்ள சில ஹோட்டல்களுக்கு ஏற்கெனவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.
கடந்த ஆண்டின் பந்தயத்துக்குப் பிறகு பல நாடுகளும் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள வேளையில், இவ்வாண்டின் பந்தயத்தை முன்னிட்டு நகரின் மையப் பகுதியில் உள்ள ஹோட்டல்கள் பலவும் விருந்தினர்களால் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 15 முதல் 17ஆம் தேதி வரையிலான வாரயிறுதியில் எஃப்1 நடைபெறவிருக்கிறது.
இப்போதே முன்பதிவுகளைப் பெறத் தொடங்கிவிட்ட ஹோட்டல்களில் தி ஃபுல்லர்டன் ஹோட்டல் சிங்கப்பூரும் ஒன்று. பந்தயத் தடத்தை அருகிலிருந்து காணும் வசதியை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.
சீனாவும் ஹாங்காங்கும் கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதால், அங்கிருந்து அதிகமானோர் இங்கு எஃப்1 பந்தயத்தைக் காண வரக்கூடும் என்று தி ஃபுல்லர்டன் ஹோட்டல் அண்ட் ரிசோர்ட்சின் பொது மேலாளர் ஜினோ டான் கூறினார்.
பந்தயத் தடத்தை ஒட்டியுள்ள கிட்டத்தட்ட அனைத்து ஹோட்டல் அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக சுவிசோட்டல் தெரிவித்தது. கடந்த ஆண்டின் எஃப்1 பந்தயம் முடிந்த கையுடன் இவ்வாண்டின் பந்தயத்துக்கான முன்பதிவுகளை தாங்கள் பெறத் தொடங்கிவிட்டதாக தி ஃபுல்லர்டன், சுவிசோட்டல் இரண்டும் குறிப்பிட்டன.
பான் பசிபிக் ஹோட்டல் அறைகளுக்கும் வலுவான தேவை நிலவுகிறது. அதன் அறைகளில் பாதிக்கும் மேலானவை முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
பந்தயம் நடைபெறும் நாள்களில் ஓர் இரவுக்கான ஹோட்டல் அறை வாடகைக் கட்டணம் $1,000க்குமேல் இருப்பதாக பயண இணையத்தளங்கள் குறிப்பிடுகின்றன.

