சிங்ஹெல்த் குழுமத்திற்கும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பிற்கும் (ஏ*ஸ்டார்) இடையில் புதிய பங்காளித்துவ உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது.
அந்த இணக்கத்தை அடுத்து இரு அமைப்புகளும் தலா $4 மில்லியன் வழங்கி ஒரு நிதியை உருவாக்கும்.
மருத்துவத் தொழில்நுட்பம், கணினித் தகவல் அறிவியல், இயந்திர மனித தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இடம்பெறும் திட்டங்களுக்கு அந்த நிதி உதவும்.
சிங்ஹெல்த் டியூக்- என்யுஎஸ் கல்வித்துறை மருத்துவ நிலையத்திற்கும் ஏ*ஸ்டார் அமைப்புக்கும் இடையில் கூட்டுத் தொழில்கள் இடம்பெற ஏதுவாக தேவையான வளங்கள் அந்த இணக்கம் காரணமாக திரட்டப்படும்.
இந்த இரண்டு அமைப்புகளுக்கும் இடைப்பட்ட ஒத்துழைப்பு காரணமாக, நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் மருத்துவத் தீர்வுகள் உருவாகும். சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கு இன்னும் சிறந்த ஆதரவு கிடைக்கும் என்று ஏ*ஸ்டார் அமைப்பின் தலைமை நிர்வாகி ஃபெடரிக் சியூ கூறினார்.
இந்தப் புதிய நிதியின் முதல் திட்டமாக சிங்கப்பூரில் உள்ள அறிவியல் வல்லுநர்கள், கண் நோய்களைக் கண்டுபிடிக்கக்கூடிய நிழற்பட முறை ஒன்றை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
'லேசிக்' போன்ற கண் அறுவை சிகிச்சைகளை இன்னும் செம்மையாக செய்வதற்கு அந்த ஆய்வுகள் மூலம் புதிய நடைமுறைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புப் பரிசோதனை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் 'டிஹெச்ஸெட்' என்ற நிழற்பட முறை, கண் திசுக்களை ஆராய்வதற்கு பாதுகாப்பான ஒன்று என்று அறியப்பட்டுள்ளது.
கருவிழிகளில் எந்த அளவுக்குத் தண்ணீர் இருக்கிறது என்பதை உடனுக்குடன் கண்காணித்து அதன்மூலம் கண் அறுவை சிகிச்சைகளை மிகவும் செம்மையாக செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவியல் வல்லுநர்கள் குழுவில் சிங்ஹெல்த் குழுமம் ஏ*ஸ்டார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இந்தத் தொழில்துறையாளர்களுடன் சேர்ந்து அந்த வல்லுநர்கள் மருந்தகச் சாதனம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.
'Thea' என்ற அந்தச் சாதனம் சமூக சுகாதார நிலையங்களிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வுத் திட்டத்தின் மருந்தக முதன்மை ஆய்வாளர் இணைப் பேராசிரியர் லியு யு சி கூறினார்.
இந்தக் குழு விரைவில் மருந்தக பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிடுகிறது. குழு உருவாக்கும் புதிய சாதனம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் வர்த்தக ரீதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பேராசிரியர் லியு கூறினார்.

