சிங்கப்பூரில் அதிகம் கடன் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
2022ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்த விற்பனை இடங்களில் 36 விழுக்காடு அளவுக்கு கடன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்ததாக 21 விழுக்காடு பற்று அட்டைகள் மூலமாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. இது தவிர 19 விழுக்காடு ரொக்கமாக பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
மின் வர்த்தகத்திலும் கடன் அட்டை முன்னணி வகிக்கிறது.
ஏறக்குறைய 42 விழுக்காடு பரிவர்த்தனைகள் கடன் அட்டை மூலம் நடந்துள்ளன. மின்னிலக்கப் பணப்பை 32 விழுக்காடு பங்கை வகிக்கிறது.
பற்று அட்டைகளின் பங்கு 11 விழுக்காடாகும்.
மொத்த பரிவர்த்தனைகளில் ஒரு விழுக்காடு மட்டுமே வீட்டுக்குப் பொருள் விநியோகிக்கும் விற்பனையில் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது.
'வோர்ல்ட்பே' நேற்று வெளியிட்ட பணம் செலுத்தும் வழிகள் தொடர்பான எஃப்ஐஎஸ் உலகளாவிய அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
'வோர்ல்ட்பே' தாய் நிறுவனமான எஃப்ஐஎஸ், உலகம் முழுவதும் உள்ள நிதி நிறுவனங்களுக்கும் வர்த்தக அமைப்புகளுக்கும் பல்வேறு வழிகளில் பணம் செலுத்துவதற்கான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கி வருகிறது.
'கிராப்பே' 'கூகல்வாலட்', ஆப்பிள்பே போன்ற மின்னிலக்க பணப்பை, கடன் அட்டை, வட்டி மற்றும் கட்டணமில்லா குறுகியகால நிதியான 'பை நவ் பே லேட்டர்' ( buy now, pay later ) போன்றவை இவற்றில் அடங்கும்.
2026ஆம் ஆண்டுவாக்கில் ஆசிய, பசிபிக் வட்டாரத்தில் இடம்பெறும் மின்வர்த்தக பரிவர்த்தனைகளில் மின்னிலக்க பணப்பையின் பயன்பாடு 73 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இது 69 விழுக்காடாக உள்ளது. 2026ஆம் ஆண்டு வாக்கில் மொத்த விற்னை முகப்புகளில் பரிவர்த்தனையின் மதிப்பு 59 விழுக்காடாக இருக்கும் என்றும் இது தற்போது 47 விழுக்காடாக உள்ளது என்றும் அறிக்கை தெரிவித்தது.
தென்கிழக்கு ஆசிய சந்தை களுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் மின்னிலக்க பணப்பெட்டகங்களைப் பயன்படுத்துவதில் பின்தங்கியுள்ளனர். குறிப்பாக விற்பனை முனையங்களில் கடந்த 2022ஆம் ஆண்டில் மின் பணப்பைகளின் பயன்பாடு 18 விழுக்காடாக உள்ளது.

