வீட்டு உபயோகப் பொருள்களை பழுதுபார்ப்பது, வேலை தேடுதல், மருத்துவர் சந்திப்புக்கு பதிவு செய்தல், மருத்துவ உதவியாளரை அழைப்பது, வீட்டைச் சுத்தம் செய்தல், திறன்பேசியை சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக மூத்தோர் நேரடி தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டு உதவி கேட்டு வருகின்றனர்.
முதியவர்களுக்கான 6767 6767 என்ற அந்த 'ஏசஸ்' பராமரிப்பு உதவி எண்ணை (ACES Care HelpLife) மூத்த தொண் டூழியர்கள் நிர்வகித்து வருகின் றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில் இச்சேவையை பிரதமர் லீ சியன் லூங் தொடங்கிவைத்தார். இதுவரை 1,734 பேர் அழைத்து உதவி கேட்டுள்ளனர். இவர்களில் 573 பேர் அறுபதுக்கும் 85 வயதுக்கும் உட்பட்ட மூத்த குடிமக்கள்.
இந்த நேரடி தொலைபேசி சேவைக்கு டெக் கீ தொகுதி முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.
அனைத்து வயதுப் பிரிவினரும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை செயல்படும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டு தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உதவி கேட்டு வருகின்றனர். இப்படி உதவி கேட்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 56 விழுக்காட்டினர் அங் மோ கியோ குழுத் தொகுதிக்கு வெளியே இருப்பவர்கள்.
இந்த நிலையில் அதிக வயதானவர்களுக்கு உதவும் வகையில் இச்சேவையை 2024ஆம் ஆண்டில் மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அத்திட்டத்தின் இயக்குநரான லோ வீ ஹியாங், தொடக்கமாக அங் மோ கியோவில் இதர பகுதிகளுக்கு சேவை விரிவுபடுத்தப்படுகிறது என்றும் இதற்காக கெபுன் பாரு தொண்டூழியர்களுக்கு இம்மாதம் பயிற்சி தொடங்குகிறது என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் முதியோர் ஆரோக்கியமான, துடிப்பான, நம்பிக்கையான வாழ்வை வாழ்வதற்கான சூழல்கள் இருந்தாலும் தனிமை, உதவியற்ற நிலை போன்ற உணர்வுகளுக்கு உதவி தேவைப்படுவதாக திரு லோ தெரிவித்தார்.
ஒரு நண்பராக அவர்களுக்கு செவிமடுப்பது, பதற்றத்தைத் தணிப்பது, ஆலோசனை கேட்பது உள்ளிட்டவற்றுக்கு உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.
'ஏசஸ்' உதவி தொலைபேசி எண்ணை முப்பது மூத்த தொண்டூழியர்கள் நிர்வகித்து வருகின்றனர்.
நாளுக்கு மூன்று மணி நேரம் என வாரத்திற்கு ஐந்து நாள்கள் அவர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

