லென்டோர் ஹில்ஸ் குடியிருப்புப் பேட்டை
லென்டோர் ஹில்ஸ் வட்டாரத்தில் குடியிருப்புகள் அமைப்பதற்கான மேலும் இரண்டு நிலப்பகுதிகளை நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த இரண்டு நிலப்பகுதிகளும் 99 ஆண்டுகளுக்கான குத்தகையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் நிலப்பகுதி லென்டோர் சென்ட்ரலில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 158,263 சதுர அடி பரப்பளவு கொண்ட அதில் கிட்டத்தட்ட 475 வீடுகளைக் கட்டலாம். அங்கு ஐந்து மாடிகள் வரை மட்டுமே கட்ட இயலும். இந்த ஆண்டு முற்பாதியில் விற்பனைக்கு விடப்படும்.
உறுதிசெய்யப்பட்ட விற்பனைப் பட்டியலில் உள்ள அந்நிலப்பகுதிக்கான ஏலக்குத்தகைக்கு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இரண்டாவது நிலப்பகுதி லென்டோர் கார்டன்சில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 222,175 சதுர அடி பரப்பளவு கொண்ட அதில் 500 வீடுகள் கட்டலாம். அந்நிலப்பகுதி விற்பனைக்கான காத்திருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இரு நிலப்பகுதிகளும் லென் டோர் 'எம்ஆர்டி' நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளன. அருகே சில்லறை விற்பனைக் கடைகள், பேரங்காடி, குழந்தைப் பராமரிப்பு நிலையம் போன்றவை அமைய இருக்கின்றன.

