ஆ. விஷ்ணு வர்தினி
தெம்பனிசில் உள்ள தனது கிளையில் ஜஹபர் ஷாலி - ஃபாரா நடியா தம்பதி எதிர்நோக்கிய இனவாதப் போக்கிலான சம்பவம் குறித்து 'என்டியுசி ஃபேர்பிரைஸ்' மன்னிப்புக் கோரி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திரு ஜஹபரும் அவரது ஐந்து வயது மகனும் இந்தியர் எனும் அடிப்படையில் 'ஃபேர்பிரைஸ்' பேரங்காடியின் நோன்பு துறப்பதற்கான அன்பளிப்புகளை எடுக்கவிடாமல் தடுக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அதற்கு மறுநாள் நிறுவனம் 'ஃபேஸ்புக்கில்' விளக்கமளித்தது.
அச்சம்பவம் விழிப்புணர்வின்மையைக் குறிப்பதாகவும் இதனை இனவாதமாகக் கருதக்கூடாது என்றும் திரு ஜஹபர் தமிழ் முரசிடம் கூறினார்.
அனைவரும் இதனை ஒரு படிப்பினையாகக் கருதவேண்டும் என்றும் தன் குழந்தைகளுக்கு இனம் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்த அது வாய்ப்பு அளித்துள்ளது என்றும் ஜஹபர் சொன்னார்.
வழக்கம்போல 'என்டியுசி ஃபேர்பிரைஸ்' பேரங்காடிக்குத் தம் இரு மகன்களுடன் சென்றிருந்த ஜஹபர்-ஃபாரா, ரமலான் மாதத்தை முன்னிட்டு அந்நிறுவனம் இஸ்லாமியர்களுக்காக வைத்திருந்த இலவச அன்பளிப்புகளைக் கண்டனர்.
அதுகுறித்து விவரம் அறிய மகனுடன் அருகில் சென்ற ஜஹபரை அங்கிருந்த வேற்றின ஊழியர், 'அவை இந்தியர்களுக்கன்று' எனக் கூறி விரட்டினார்.
"இவ்வாண்டு என் மூத்த மகனை நோன்புமுறைக்கு அறிமுகப்படுத்தினோம். நாம் ஏன் விரட்டப்பட்டோம்? மலாய் இனத்தோர் மட்டும்தான் நோன்புமுறையைப் பின்பற்றுவார்களா? எனத் தனது அடையாளத்தைப் பற்றி குழம்பிய அவனிடத்தில் அச்சம்பவம் பல கேள்விகளை ஏற்படுத்தியது," என்றார் ஜஹபர், 36.
கோபம் கொள்ளாமல், வயது முதிர்ந்த அந்த ஊழியரிடம் இனம், சமயம் இரண்டும் வெவ்வேறு என்று தான் விளக்க முற்பட்டதாகவும் மேலிடத்து உத்தரவையே தான் பின்பற்றுவதாக ஊழியர் பதிலளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து திருவாட்டி ஃபாரா நடியா தன் 'ஃபேஸ்புக்' பக்கத்தில் பதிவிட்டார்.
அப்பதிவு பரவியதை அடுத்து, 'ஃபேர்பிரைஸ்' ஜஹபரிடம் நேரடியாக மன்னிப்புக் கோரியது. ஊழியருக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கப்பட்டதுடன் தம்பதியின் வீட்டுக்கே சென்று மன்னிப்புக் கோரும்படி ஊழியர் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் நிறுவனம் சொல்லிற்று.
ஆயினும், "எச்சரிக்கைக் கடிதத்தை நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டேன். ஊழியர் மன்னிப்புக் கேட்பதற்கான அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளேன்," என்றார் ஜஹபர்.
மாறாக, ஃபேர்பிரைசின் அந்த அன்பளிப்புகள் எல்லாருக்குமானவையாக மாற்றப்படவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியருக்குத் தக்க ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் நிறுவனத்தின் இஃப்தார் அன்பளிப்புகள் அனைத்து இஸ்லாமிய வாடிக்கையாளர்களுக்கும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் 'ஃபேர்பிரைஸ்' கூறியது.
இதுபோன்ற சம்பவத்தை எதிர்கொண்டது ஜஹபர்-ஃபாரா தம்பதிக்குப் புதிதல்ல. மலாய் இந்தியரான ஃபாரா, சிறுவயதிலிருந்து ஒரு பரத நாட்டியக் கலைஞர். அவரின் அடையாளம் குறித்த சந்தேகங்கள் பலமுறை எழுந்தது உண்டு.
வேறுபாடுகளைச் சகித்துக்கொள்வதோடு நிறுத்திவிடாமல் வேறுபட்ட மக்களை ஏற்றுக்கொள்ளும் போக்கு சிங்கப்பூரில் மேம்பட வேண்டும் என்பது அத்தம்பதியின் விருப்பம்.