சிங்கப்பூர் அதன் நீடித்த நிலைத்தன்மை இலக்குகளை அடைய புதிய திறன்களில் முதலீடு செய்யவும் அதோடு பருவநிலை மிரட்டலுக்கு எதிராக தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் உரை மீதான பிற்சேர்க்கையில் தனது அமைச்சின் திட்டங்களை அவர் முன்வைத்தார்.
கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது, வேளாண்-உணவு உற்பத்தி, நகர்ப்புற வெப்பத்தைச் சமாளிப்பது, கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் ஆய்வு, மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக நிறுவனங்கள், உயர்கல்வி நிலையங்களுடன் அமைச்சு கைகோர்த்துள்ளது.
நீர்த்தேக்கங்களில் சூரிய சக்தித் தகடுகள், பயன்படுத்தப்பட்ட நீர் மற்றும் உணவுக் கழிவை சுத்திகரிக்க துவாஸில் உள்ள ஒருங்கிணைந்த வசதிகள் போன்ற தொழில்நுட்பங்கள் சோதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
சிங்கப்பூர், 2050ஆம் ஆண்டுவாக்கில் கரிமக் கழிவை முற்றிலும் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கை அடைய நிறுவனங்களுக்கும் வீடுகளுக்கும் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான உதவிகள் சிங்கப்பூர் பசுமை திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
எரிசக்தி சேமிப்பு நிதி, பருவநிலைக்கு உகந்த குடும்பங்களுக்கான திட்டங்கள் ஆகியவை அவற்றில் சில.
தொழில் வசதிகளுடன் கூடிய நிறுவனங்களுக்கு கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் எரிசக்தி சேமிப்பு வசதிகளை மேம்படுத்த மானியம் வழங்கப்படும்.
மேலும் ஓரறை முதல் மூவறை வரையிலான வீவக வீடுகளில் வசிப்போருக்கு எரிசக்தி, தண்ணீரை சேமிக்கும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க மின்னி லக்கப் பற்றுச்சீட்டுகள் வழங்கப் படும்.
கரிம வரி, டன்னுக்கு ஐந்து வெள்ளியிலிருந்து 2030ஆம் ஆண்டுவாக்கில் டன்னுக்கு ஐம்பது முதல் 80 வெள்ளி வரை உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
குறைந்த கரிம வெளியேற்றத்துக்கு மாறுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறையின் பசுமை இலக்கான கிரீன்காவ்.எஸ்ஜி ( GreenGov.SG ) முயற்சி மூலம் 2045ஆம் ஆண்டுவாக்கில் கரிம வெளியேற்றத்தை முற்றிலும் குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனும் தமது அமைச்சும் விதிமுறை, ஊக்குவிப்பு மூலம் தூய்மையான எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் என்றார்.
2040ஆம் ஆண்டுவாக்கில் சாங்கி விமான நிலையத்தில் அனைத்து வாகனங்களும் தூய்மை எரிசக்தியால் ஓடும். இலகுரக வாகனங்கள் 2025ஆம் ஆண்டுவாக்கில் மின்சாரத்தில் ஓடுவதாக இருக்கும்.
பசுமை சார்ந்த போக்குவரத்துக்கு சுமூகமாக மாற விமானத் துறை, கடல்துறை ஆகியவற்றுடன் போக்குவரத்து அமைச்சு சேர்ந்து செயல்படும் என்று அவர் கூறினார்.
நிலப் போக்குவரத்து பற்றியும் திரு ஈஸ்வரன் பேசினார்.
சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பு அடுத்த பத்து ஆண்டுகளில் 100 கி.மீட்டரிலிருந்து 360 கி.மீட்டருக்கு விரிவுபடுத்தப் படும். அதாவது, பத்தில் எட்டு வீடுகளுக்கு பத்து நிமிட தொலைவில் ஒரு எம்ஆர்டி நிலையம் இருக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித் தார்.

