நோன்புப் பெருநாளன்று தொழுகைக்காக அதிகமான முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு வருவார்கள் என்பதால் தொழுகை நேரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் அடுத்த வாரம் முடிவுக்கு வருகிறது. இவ்வேளையில் நோன்புப் பெருநாள் காலை பள்ளிவாசலில் மூன்று வேளை வரை தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முஸ்லிம்கள் காலை 7.15 மணி, 8.45 மணி, 9.45 மணி ஆகிய நேரங்களில் தொழுகையில் பங்கேற்கலாம்.
சிங்கப்பூரில் உள்ள 68ல் 12 பள்ளிவாசல்களில் நோன்புப் பெருநாளன்று காலை மூன்று வேளைகளில் தொழுகை நடத்தப்படுகின்றன. 51 பள்ளிவாசல்களில் இரண்டு வேளையும் ஐந்து பள்ளிவாசல்களில் காலை 8.45 மணிக்கு ஒருவேளையும் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், தொழுகைக்கான ஏற்பாடுகளை அறிவித்தது.
தொழுகைக்கு மேலும் இருபது இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இது பற்றிய விவரம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும். 68 பள்ளிவாசல்களிலும் கூடுதல் இருபது இடங்களிலும் சேர்த்து 240,000 பேர் வரை தொழுகையில் ஈடுபடலாம்.
கொள்ளைநோய் காலத்தில் அமலாக்கப்பட்ட முன்பதிவு முறை, ஐந்து பள்ளிவாசல்களைத் தவிர்த்து மற்ற பள்ளிவாசல்களில் நீக்கப்படுகிறது. அந்த ஐந்து பள்ளிவாசல்களிலும் காலை 7.15 மணி தொழுகைக்கு மட்டும் முன்பதிவு தேவைப்படும்.
தாருல் குஃப்ரான், அல் மவத்தா, சலீம் மாத்தார், வாக் தஞ்சோங், யூசோஃப் இஷாக் ஆகியவை அந்த ஐந்து பள்ளி வாசல்கள். சிங்கப்பூரில் நோன்புப் பெருநாள் ஏப்ரல் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

