மோனலிசா
சித்திரைப் புத்தாண்டைப் புத்துணர்ச்சியுடன் தொடங்கும் தமிழர்கள், வீட்டைச் சுத்தம் செய்து புத்தாடை உடுத்தி குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்து சுவையான உணவு உட்கொண்டு அதை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இன, சமய பேதமின்றி வரவேற்று மகிழ்கிறார்கள்.
"சித்திரைப் புத்தாண்டன்று கணவர், மகள், மகன் என குடும்பமாகக் கோயிலுக்கு சென்று வருவோம். பல உணவு வகைகளோடு பிரம்மாண்ட விருந்து தயாரித்து உறவினர்களுடன் உட்கொள்வது புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்ற நிம்மதியளிக்கும்," என்று கூறினார் குடும்பத் தலைவியான வள்ளிமீனா கண்ணன், 42.
மேலும் சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் இம்மாதம் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுவதே மாதம் முழுக்க கொண்டாட்ட உணர்வை அளிக்கும்.
"தற்போது 18 வயதாகும் என் மகளையும் 14 வயதாகும் என் மகனையும் சிறு வயது முதலே இம்மாதத்தில் நடக்கும் பல தமிழ் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வேன். குறிப்பாக தமிழ்ப் புத்தாண்டன்று தமிழ் நிகழ்ச்சிகளில் பங்குகொள்வது மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்," என்றும் தெரிவித்தார்.
"சிறு வயது முதலே இந்ததினத்தில் வீட்டிலேயே நாங்கள் சாமி அறையை அலங்கரித்து தமிழ் பக்திப் பாடல்கள் பாடுவோம். வீட்டைச் சுத்தம் செய்து, அலங்கரித்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும். இவ்வாண்டு அதிக தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற தீர்மானமும் எடுத்துள்ளேன்," என்று கூறினார் பல்கலைக்கழக மாணவியான ராஜதர்ஷினி நெடுமாறன், 18.
"என் தாயாரின் பிறந்தநாள் தமிழ்ப் புத்தாண்டன்று வருவதால் ஒவ்வோர் ஆண்டும் இந்த தினம் எங்கள் குடும்பத்தினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும். தாயார், தந்தை, மூத்த சகோதரிகள் என அனைவரும் ஒன்றாகக் கொண்டாடி மகிழ்வோம். சிங்கப்பூரில் வாழும் தமிழ் குடும்பமாக இந்ததினத்தை வரவேற்பதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்," என்று கூறினார் ஆராய்ச்சியாளரான 33 வயது ஷீனா ரமசானு.
தன் மனைவி, இரண்டு மகன்கள் என குடும்பத்தினருடன் ஒவ்வோர் ஆண்டும் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடி வருகிறார் கிறிஸ்தவரான தமிழ்ச்செல்வன் பிலவேந்திரன், 50. தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான இவர், "பெரும்பாலும் தமிழ்ப் புத்தாண்டு, இந்துக்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகையாகக் கருதப்படுகிறது. ஆனால், அது இன, சமய பேதமின்றி உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் கொண்டாட வேண்டிய பண்டிகையாகும்," என்று கூறினார்.

