சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் மூத்த மேலாளருக்கு லஞ்சம் தந்ததன் தொடர்பில் கட்டுமான நிறுவன இயக்குநர் ஒருவருக்குப் பத்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
'யுசிசி' எனும் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநரான 57 வயது இங் தியாம் ஹுவாட், 2017ஆம் ஆண்டு காப்பகத்தில் அப்போது பணிபுரிந்த கோ மெங் குவீ எனும் மேலாளருக்கு $72,000 கையூட்டு தந்தார்.
வனவிலங்குக் காப்பகத்தின் ஆறு பணித்திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி பெறுவது தொடர்பில் இவ்வாறு லஞ்சம் தரப்பட்டது. அத்திட்டங்களின் மொத்த மதிப்பு $420,000.
இங், தன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து நேற்று அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் 'யுசிசி' நிறுவனத்தில் பணியில் இல்லை எனத் தெரிகிறது. மேலாளர் கோவிடம் இயக்குநர் இங்கை, 'லேன்ட்ரோ' கட்டுமான நிறுவனத்தின் விற்பனை மேலாளரான டே சுன் சியோங் என்பவர் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இங், நேற்று $75,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். இம்மாதம் 27ஆம் தேதி அவர் தனது தண்டனையைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

