பொருளியல் வாய்ப்புகள் சரியில்லை. எதிர்பார்க்கப்பட்டதைவிட பொருளியல் அதிகமாக மெதுவடைகிறது.
இந்தச் சூழலில், தன்னுடைய நாணயக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இப்போதைய கொள்கையே நீடிக்க சிங்கப்பூர் நாணய ஆணையம் அனுமதித்து உள்ளது.
ஆணையம் இதுவரை கொள்கையை இறுக்கதாக வைத்து இருந்தது. பணவீக்கத்திற்கு எதிரான ஆயுதமாக அது சிங்கப்பூர் நாணயத்தை வலுப்படுத்தி வந்தது. ஆனால், இப்போது அது தனது ஒருமித்த கவனத்தை வேறு அம்சங்களில் திருப்பி இருக்கிறது.
பொருளியல் எதிர்பார்க்கப்படுதைவிட மேலும் மெதுவடையக்கூடிய ஆபத்தைத் தான் எதிர்நோக்குவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நாணயத்தின் நடப்பு பரிவர்த்தனை விகிதத்தை தன்னுடைய முக்கியக் கொள்கை ஆயுதமாக ஆணை யம் பயன்படுத்தி வருகிறது.
சிங்கப்பூர் நாணயம் இப்போது எந்த அளவில் மதிப்பு கூடி வருகிறதோ அதே அளவை அனுமதிக்கப் போவதாக ஆணையம் அறிவித்துள்ளது.
ஆணையம் 2021 அக்டோபரில் தொடங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக நாணயக் கொள்கையை இறுக்கி சிங்கப்பூர் நாணயம் மதிப்பு அதிகரிக்க அனுமதித்து வந்தது.
அதேபோலவே, ஆறாவது முறையாக வும் ஆணையம் அதையேதான் செய்யும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக தனியார் துறை பொருளியல் வல்லுநர்களில் பெரும்பாலானவர்கள் அண்மைய ஆய்வுகளில் தெரிவித்து இருந்தனர்.
அவர்களைப் பொறுத்தவரை ஆணையத்தின் இப்போதைய முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
பொருளியல் வாய்ப்புகள் ஆபத்தில் இருப்பதால் சிங்கப்பூர் நாணயக் கொள்கைகளை மேலும் இறுக்கி நாணயத்தின் மதிப்பு மேலும் கூட அனுமதிக்க ஆணையம் இப்போதைக்கு ஆயத்தமாக இல்லை. அப்படிச் செய்தால் சிங்கப்பூரின் ஏற்றுமதிகள் அதிக செலவு வைக்கக் கூடியவையாக ஆகிவிடும். இதனால் பொருளியல் பாதிக்கப்படும்.
இதே காரணத்திற்காகவே கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் அண்மைய வாரங்களில் இதே முடிவே எடுக்கப்பட்டு உள்ளது.
ஆணையம் ஆண்டுக்கு இரண்டு முறை தனது கொள்கை அறிக்கையை வெளியிடும். சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு குறைவாகவே இருக்கும் என அதில் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
உலக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஆபத்தை எதிர்நோக்குகின்றன. இந்தச் சூழலில் உள்ளூர் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதைவிட மேலும் மெதுவடையக்கூடும் என்று ஆணையம் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
ஆகையால், இப்போதைய நாணயக் கொள்கையைத் தான் நிலைநாட்டி வருவதாக ஆணையம் குறிப்பிட்டது.

