பொருளியல் மந்தம் தலைகாட்டும் ஆபத்து அதிகம் என வல்லுநர்கள் கருத்து
சிங்கப்பூரின் பொருளியல், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெறும் 0.1% மட்டுமே வளர்ந்து உள்ளது. உலகப் பொருளியல் நிலவரத்தின் தாக்கம் சிங்கப்பூரில் தெரியவந்துள்ளதையே இது காட்டுகிறது.
இதனால், பொருளியல் வல்லுநர்கள் தங்களின் வளர்ச்சிக் கணிப்பைக் குறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பொருளியல் மந்தம் தலைகாட்டக்கூடிய ஆபத்து கூடியுள்ளது.
பொருளியல் முந்திய காலாண்டில் 2.1% வளர்ச்சி கண்டு இருந்தது. வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்ட முன்கணிப்புகள் மூலம் இந்த நிலவரங்கள் தெரிய வருகின்றன.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வளர்ச்சி 0.6% இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் ஆய்வில் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்து இருந்தார்கள். ஆனால், அந்த அளவுக்குக்கூட பொருளியல் வளரவில்லை.
பொருளியல் நிலவரம் பற்றி கருத்துக் கூறிய யுஓபி வங்கி, சிங்கப்பூர் பொருளியல் மந்தத்தில் சிக்கக்கூடிய ஆபத்து கணிசமாக இருக்கிறது என்று தான் நினைப்பதாகத் தெரிவித்தது.
இந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளிலும் வளர்ச்சி பூஜ்ஜியத்திற்கும் குறைந்தால் பொதுவாக அது நடைமுறை மந்தமாகிவிடும்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை வர்த்தகம் தொடர்பான துறைகள் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளின. முதல் காலாண்டு நிலவரத்தைப் பார்க்கையில், சிங்கப்பூருக்கான இந்த ஆண்டு வளர்ச்சி வாய்ப்பு எச்சரிக்கை விடுப்பத போலவே இருக்கும் என்பது உறுதி என்றும் அந்த வங்கி கூறியது.
சீனப் பொருளியல் காரணமாக இரண்டாவது காலாண்டில் ஊக்கம் கிட்டவில்லை என்றால் பொருளியல் மந்தம் சாத்தியம்தான் என்று மேபேங்க் வல்லுநர் சுவா ஹாக் பின் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றிய இறுதியான விவரங்கள் மே மாதம் வெளியிடப்படும்.
அதை அடிப்படையாக வைத்து இந்த ஆண்டு முழுவதற்குமான வளர்ச்சியை வர்த்தக, தொழில் அமைச்சு குறைத்துவிடும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த ஆண்டு முழுவதற்கும் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முன்பு கணிக்கப்பட்ட அளவுக்கு இருக்காது என்றும் அது அநேகமாக 2% முதல் 3% வரைப்பட்டதாக இருக்கும் என்றும் 'ஆர்ஹெச்பி' நிறுவனத்தின் மூத்த பொருளியல் வல்லுநர் பர்னபாஸ் கான் கூறினார்.
இருந்தாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வளர்ச்சி வேகம் சூடுபிடிக்கும் என்றே தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பொருளியல் 0.5% முதல் 2.5% வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு கடந்த பிப்ரவரி மாதம் கணித்திருந்தது.

