பலரையும் உள்ளடக்கக்கூடிய சிங்கப்பூரை சாதிக்கவும் மக்களின் நிதி வளத்தைக் கட்டிக்காக்கவும் மக்களுக்கு நீதி கிடைக்கவும் தாங்கள் நடைமுறைபடுத்தக்கூடிய திட்டங்களைப் பற்றி அதிபர் உரை பிற்சேர்க்கையில் அமைச்சுகள் கோடிகாட்டி இருக்கின்றன.
மேலும் பலரையும் உள்ளடக்கும் வகையில் சமூகத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளை முன்னேறும் சிங்கப்பூர் இயக்கத்தின் வழியாக சிங்கப்பூரர்கள் முன்வைத்து இருக்கிறார்கள்.
சமூகத்திற்குத் தொண்டு செய்யும் கலாசாரத்தைப் பேணி வளர்ப்பதற்கான கருத்துகளையும் யோசனைகளையும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறி இருக்கிறார்.
அவற்றின் பேரில் அமைச்சு சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து செயல்படும் என்றார் அவர்.
அரசாங்கம் தன்னுடன் சேர்ந்து தேசிய அளவிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் கொள்கைகளை உருவாக்குவதற்கும் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் கூறினார்.
பரிவுமிக்க, பிணைப்புமிக்க, நம்பிக்கைமிக்க நாட்டை பலப்படுத்துவதே தமது அமைச்சின் நோக்கம் என்றும் திரு டோங் குறிப்பிட்டார்.
ஒருவர் மற்றொருவர் மீது காட்டும் பரிவை தம்முடைய அமைச்சு மேம்படுத்தும். அதை சிங்கப்பூர் கலாசாரத்தின் மிக முக்கிய அங்கமாக ஆக்கும்.
தொண்டூழியம், நன்கொடைக்கான வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், தம் அமைச்சு அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்து பாடுபட்டு சிங்கப்பூரின் தேசிய முன்னுரிமைகளுக்கு ஆதரவாக வளங்களைப் பிரித்துவிடும் என்று தெரிவித்தார்.
இப்போதைய, எதிர்காலத் தலைமுறை சிங்கப்பூரர்களின் விருப்பங்கள் நிறைவேற ஆதரவு அளிக்கும் வகையில், நாட்டின் நிதி உத்திகளைச் சரிப்படுத்த விவேகமான, பொறுப்புள்ள வழிகளில் வளங்கள் ஒதுக்கப்படும் என்றாரவர்.
சிங்கப்பூர் அடுத்த கட்ட நாட்டு உருவாக்கத்திற்கு ஆயத்தமாகிறது. இந்த நிலையில், அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கையைக் கட்டிக்காப்பதும் முக்கியமானது.
சட்டம் வலுவாக நடப்பில் இருந்து வர வேண்டும்.
இது நம்பிக்கைக்குரிய அரசாங்கத்தின் வலுவான தூண்களில் ஒன்று என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்தார்.
பரிணமித்து வரும் சமூகத் தேவைகளைச் சமாளிக்கும் வகையில் சட்டச் சீர்திருத்தங்களைச் சாதிப்பதற்கான முயற்சிகளைச் சட்ட அமைச்சு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றாரவர்.
பலதரப்புநிலை, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக ஒழுங்குமுறையை தமது அமைச்சு ஆதரிக்கும் என்ற அமைச்சர், மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான வழிகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

