சிங்கப்பூரர்கள் திருமணம் செய்துகொள்ளவும் பிள்ளைகளைப் பெற்று பேணி வளர்க்கவும் ஆதரவளிக்க அரசாங்கம் மேலும் பலவற்றைச் செய்யும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த உத்தி குழுவிற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு வோங், அதிபர் உரையின் பிற்சேர்க்கையில் இவற்றைத் தெரிவித்து இருக்கிறார்.
அண்மையில் தாக்கலான வரவுசெலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கும் பல்வேறு திட்டங்கள் இருப்பதை அவர் அந்தப் பிற்சேர்க்கையில் சுட்டினார்.
அதற்கும் மேலாக, அந்த உத்திக் குழு தொடர்ந்து கொள்கைகளை மறுபரிசீலனை செய்து அவற்றை மேம்படுத்தும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பெற்றோருக்கு மேலும் உதவிக்கரம் நீட்டுவது, வேலை, குடும்பப் பொறுப்புகள் இரண்டையும் இன்னும் திறம்பட கையாள முயல்வோருக்கு உதவுவது உள்ளிட்ட பலவும் அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூரின் மொத்த கருவள விகிதம் சரிந்து வருகிறது. மக்கள்தொகையும் மூப்படைகிறது. மேலும் பல சவால்களை நாடு எதிர்நோக்குகிறது.
அவற்றை எல்லாம் சமாளிக்கும் வகையில் அரசாங்கம் தன்மக்கள்தொகை உத்திகளை மேம்படுத்தும் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
நீண்ட ஆயுளை மேலும் அதிகமாக்கி, அதை ஓர் உறுதுணை பலமாக்க அரசாங்கம் மேலும் பலவற்றைச் செய்யும்;
வெளிநாட்டு ஊழியர்களையும் குடிநுழைவுகளையும் கவனமாக நிர்வகிக்கும்; குடும்பங்களை மிக முக்கியமாகக் கருதி அவற்றுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளைப் பலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவற்றோடு மட்டுமன்றி, அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு, உத்திகளை மறுபரிசீலனை செய்து, புதிய கொள்கைகளை உருவாக்கி, சிங்கப்பூரர்கள் வாழ்க்கை முழுவதும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை அந்த உத்திக் குழு உறுதிப்படுத்தும்.
நாடளாவிய முறையில் மக்களை ஈடுபடுத்தும் 'முன்னேறும் சிங்கப்பூர்' என்ற முயற்சிக்கு அப்பாலும் அந்த உத்திக் குழு தொடர்ந்து அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றைச் செம்மையாக நடைமுறைப்படுத்தும்.
பருவநிலை மாற்றங்களைச் சமாளிக்க கரிம வரி அதிகரிப்புத் திட்டங்கள் இடம்பெற இருக்கின்றன. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத எரிபொருள்களைப் பயன்படுத்த சிங்கப்பூர் முயற்சிகளை மேற்கொண்டு வரும்.
சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு ஆய்வு, உருவாக்கத் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபடும்.
அதன்மூலம் குறைந்த கரிம தொழில்நுட்பங்களைக் கண்ட றிந்து நடைமுறைப்படுத்தும்.
அதேவேளையில், உலகம் வெப்பமாவதால் ஏற்படக்கூடிய தாக்கத்தைச் சமாளிக்க அந்த உத்திக் குழு சிங்கப்பூரர்களை ஆயத்தப்படுத்தும்.
மோசடிகளுக்கு எதிராக மக்களைக் காப்பாற்ற மேலும் உதவிகள் கிடைக்கவிருக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு முடிவில் 'செக்ஹூ' (CheckWho) என்ற புதிய செயல்திட்டம் நடப்புக்கு வரும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ பிற்சேர்க்கையில் தெரிவித்து இருக்கிறார்.
அதேபோல, அரசாங்கச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான சான் சுன் சிங், அரசாங்கச் சேவை தன்னுடைய அதிகாரிகளுக்கு உதவுவதில் ஒருமித்த கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
அதன்மூலம் அரசாங்க அதிகாரிகள் தங்களது வாழ்க்கைத் தொழில் முழுவதும் புதிய தேர்ச்சிகளை, புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள் என்றாரவர்.

