நிலப் போக்குவரத்து ஆணையம் மொத்தம் $650 மில்லியன் மதிப்புள்ள இரண்டு குத்தகைகளைக் கொடுத்து இருக்கிறது.
சிங்கப்பூரின் எட்டாவது எம்ஆர்டி வழித்தடமான குறுக்குத் தீவு வழித்தடத்தில் முக்கியமான நான்கு சாதன முறை களை அமைப்பதற்காக அந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.
முதலாவது ஒப்பந்தம் 'சீமென்ஸ் மொபிலிட்டி' என்ற நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் மதிப்பு சுமார் $450 மில்லியன்.
இதன்படி, அந்த நிறுவனம் குறுக்குத் தீவு வழித்தடத்திற்காக சமிக்ஞை முறைகளையும் நடைமேடைக் கதவுகளையும் வழங்கும். அவற்றை வடிவமைத்து, உருவாக்கி, பொருத்தும் வேலை களை அந்த நிறுவனமே செய்து கொடுக்கும்.
இரண்டாவது ஒப்பந்தம் 'எஸ்டி இன்ஜினியரிங் அர்பன் சொலுஷன்ஸ்' என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட $200 மில்லியன் ஆகும்.
குறுக்குத் தீவு வழித்தடத்திற்கான ஒருங்கிணைந்த மேற்பார்வை கட்டுப்பாட்டு சாதனங்களையும் தகவல்தொடர்பு சாதனங்களையும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கும்.
அவற்றை வடிவமைத்து, உருவாக்கி, வழங்கி, பொருத்தி, பரிசோதித்து, செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத்தையே சாரும். நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
பல அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்து அவற்றுக்குப் பிறகே இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது. குறைந்த செலவு, தரம், அனுபவம், சாதனை போன்ற பலவும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு குத்தகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன.
குறுக்குத் தீவு வழித்தடம் சிங்கப்பூரின் கிழக்கு, வடகிழக்கு, மேற்குப் பகுதி மக்களுக்குச் சேவையாற்றும்.
அது ஜூரோங் ஏரி வட்டாரம், பொங்கோல் மின்னிலக்க வட்டா ரம், சாங்கி வட்டாரம் போன்ற பெரும் பெரும் மையங்களை எல்லாம் இணைத்து உதவும்.
அந்த 29 கி.மீ. வழித்தடத்தில் அமையக்கூடிய ரயில் நிலையங்களில் கிட்டத்தட்ட பாதி நிலையங்கள் முனையங்களாக இருக்கும். அவற்றில் இதர வழித்தடங்கள் சந்திக்கும்.
ஆகையால், பயணிகள் பல திசைகளிலும் எளிதாகப் பயணம் செய்ய அந்த வழித்தடம் மிகவும் வசதியாக இருக்கும். குறுக்குத் தீவு வழித்தட கட்டுமான வேலை மூன்று கட்டங்களாக நடக்கும்.

