வடக்கு, மத்திய வட்டார குடியிருப்பாளர்கள் ஜூலை முதல் பதிந்துகொள்ளலாம்
சிங்கப்பூரின் வருமுன் காக்கும் 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்டம் ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்போது, சிங்கப்பூரின் மத்திய, வடக்கு வட்டாரங்களில் வசிக்கும் 1.5 மில்லியன் குடியிருப்பாளர்கள் உடற்பயிற்சி, கலை, கராவோக்கே போன்ற கிட்டத்தட்ட 450 நடவடிக்கைகளுக்கு இணையத்தளம் செயலி அல்லது அழைப்பு மையத்தின் மூலமாகவோ பதிவுசெய்யலாம்.
இவ்விரு வட்டாரங்களிலும் வசிப்பவர்களின் சுகாதாரப் பராமரிப்பைக் கவனித்துக்கொள்ளும் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் (என்எச்ஜி) 'சுகாதார கிராமம்' (ஹெல்த் கம்போங்) என அழைக்கப்படும் 450க்கும் மேற்பட்ட சுகாதார, சமூகப் பாராமரிப்பு நடவடிக்கைகளை இந்த ஆண்டுக்கான அதன் செயல்திட்டக் கருத்தரங்கில் நேற்று வெளியிட்டது.
பீஷான், கேலாங், ஈசூன், உட்லண்ட்ஸ் போன்ற வட்டாரங்கள் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் கீழ் உள்ளன.
ஸும்பா, தாய்சீ போன்ற உடற்பயிற்சி வகுப்புகள், முதியோரை இலக்காகக்கொண்ட நாற்காலி ஸும்பா, மின்னிலக்கப் பயிலரங்குகள், தோட்டக்கலை, போன்ற பரந்த அளவிலான நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
என்எச்ஜியுடன் இணைந்துள்ள செயின்ட் லூக்ஸ் முதியோர் பராமரிப்பு, சுகாதார மேம்பாட்டு வாரியம் போன்ற தேசிய முகவைகளும் சமூகப் பங்காளிகளும் இந்த நடவடிக்கைகளை வழங்குகின்றன. தற்போது இந்தநடவடிக்கைகளுக்கான ஒற்றை இணையத்தளமோ அல்லது அழைப்பு நிலையமோ இல்லை.
எதிர்காலத்தில் கூடுதல் நடவடிக்கைகள் சேர்க்கப்படும், சில குறைந்தளவிலான கட்டணத்தைக் கொண்டிருக்கலாம்.
'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' உத்தியானது, சுகாதாரப் பாராமரிப்பை தீவிரநோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் இருந்து சமூகத்திற்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறைந்தபட்சம் 60 வயதுடையவர்கள், நாட்பட்ட நோய்களைத் தடுக்க அல்லது நிர்வகிக்க தாங்கள் தேர்வு செய்யும் ஒரு பொது மருத்துவரிடம் (ஜிபி) பதிவுசெய்துகொள்ளலாம். 40 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் தங்கள் நாட்பட்ட நோய்களை சமாளிக்க ஏற்கெனவே தாங்கள் பார்க்கும் பொது மருத்துவரிடம் தங்களது நாட்பட்ட நோய் பராமரிப்புக்கும் பதிந்துகொள்ளலாம்.
வாழ்க்கைமுறையைச் சரிசெய்தல், வழக்கமான உடல்நலப் பரிசோதனை, பொருத்தமான தடுப்பூசிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரத் திட்டத்தை உருவாக்க பொது மருத்துவர் நோயாளிகளுடன் இணைந்து பணியாற்றுவர்.
மத்திய, வடக்கு வட்டாரங்களில் உள்ள ஒவ்வோர் அக்கம்பக்க குடியிருப்பிலும் குடியிருப்பாளர்களுக்கான திட்டங்களை உருவாக்கி ஒழுங்கமைக்க பொது மருத்துவர்கள், சமூகப் பங்காளிகள், பல்வேறு முகவைகள் ஒன்றிணைக்க, பராமரிப்பு சமூகம் என்றழைக்கப்படும் பராமரிப்பு கட்டமைப்புகளை என்எச்ஜி உருவாக்கி வருகிறது.
ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான என்எச்ஜியின் குழும துணை தலைமைச் செயல் அதிகாரியும், டான் டோக் செங் மருத்துவமனை, மத்திய சுகாதார அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பேராசிரியர் யூஜின் ஃபிடெலிஸ் சோ இதனைத் தெரிவித்தார். 2022இல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 77 பராமரிப்புக் கட்டமைப்புகளை என்எச்ஜி நிறுவியுள்ளது.
கருத்தரங்கின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங், மார்ச் நடுப்பகுதியில் ஆட்சேர்ப்பு தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 800 பொது மருந்தகங்கள் 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்டத்தில் சேர்ந்துள்ளது என்றார்.
என்எச்ஜி உடன், சிங்கப்பூர் சுகாதார சேவைகள் (சிங்ஹெல்த்), தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (என்யுஎச்எஸ்) ஆகியவையும் 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. ஒவ்வொன்றும் வட்டார சுகாதார மேலாளர்களாக ஏறக்குறைய 1.5 மில்லியன் குடியிருப்பாளர்களை பராமரிக்கின்றன.