சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவர் லியூ மன் லியோங்கின் மகன் கார்ல் லியூவுக்கு முந்திய விசாரணையில் மாவட்ட நீதிபதியிடம் பொய் கூறியதற்காக நேற்று இரண்டு வார சிறை விதிக்கப்பட்டது. அவர்களின் வீட்டில் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்தின் முன்னாள் பணிப்பெண் திருவாட்டி பார்தி லியானி தொடர்புடையது.
கார்ல் லியூ, 45, பொதுத் துறை ஊழியரிடம் தவறான தகவலை வழங்கிய குற்றத்தை மார்ச் 30ஆம் தேதி ஒப்புக்கொண்டார். இக்குற்றத்திற்கு ஈராண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
திருவாட்டி பார்தி, 49, திரு லியூ மன் லியோங் வீட்டில் 2007ல் வேலையில் சேர்ந்தார். 2016 மார்ச் மாதம், வீட்டு வேலைகளுடன் வேறு இடத்தில் இருந்த அலுவலகத்தையும் சுத்தம் செய்யுமாறு பணிக்கப்பட்டதால் அவர் வருத்தமடைந்தார்.
2016 அக்டோபர் 28ஆம் தேதி பார்தியை பணியிலிருந்து நீக்கிய லியூ குடும்பத்தார், தமது உடைமைகளைப் பெட்டிகளில் அடுக்க அவருக்கு இரண்டு மணிநேரம் கொடுத்தனர். இந்தோனீசியா திரும்பும் முன் மனிதவள அமைச்சில் புகார்செய்யப் போவதாக பார்தி கூறினார். அந்தப் பெட்டிகளைக் கட்டணம் செலுத்தி தமக்கு கப்பலில் அனுப்பி வைக்குமாறு கார்ல் லியூவிடம் பார்தி கேட்டுக்கொண்டார்.
அவர் சென்றதும் அவரது பெட்டிகளைத் திறந்த லியோ குடும்பம், அவற்றில் சில தங்களு டையவை என்று காவல்துறையிடம் புகார் செய்தது. 2016 டிசம்பரில் சிங்கப்பூர் திரும்பிய பார்தி கைதுசெய்யப்பட்டார். மாவட்ட நீதிமன்றத்தில் அவர்மீது பல திருட்டுக் குற்றங்கள் சாட்டப்பட்டன. மொத்தம் $46,856 மதிப்புடைய பொருள் களைத் திருடியது அதில் ஒன்று. அதில் ஒவ்வொன்றும் $150 மதிப்புள்ள 120 பொருள்கள் இருந்தன.
அதில் இருந்த வெளிர் நிற போலோ டி-சர்ட்டும் சிவப்பு நிற பெண்கள் சட்டையும் தம்முடையவை என்று 2018 ஜூலை 17 அன்று கார்ல் லியூ பொய் சாட்சியம் அளித்தார்.
2019 மார்ச் 20 அன்று குற்றச்சாட்டைத் திருத்தி, அதிலிருந்து டி-சர்ட், சிவப்புச் சட்டை உட்பட ஐந்து ஆடைகளை நீதிபதி லோ அகற்றினார். அவை இரண்டும் கார்ல் லியூவுக்குச் சொந்தமானவை அல்ல என்பதை நீதிபதி கண்டறிந்தார்.
எனினும், $30,000க்கும் அதிக மதிப்புள்ள பொருள்களைத் திருடியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு திருவாட்டி பார்திக்கு ஈராண்டு சிறை விதிக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற மேல்முறையீட்டைத் தொடர்ந்து தம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் பார்தி விடுவிக்கப்பட்டார்.

