கவனக்குறைவாக வாகனம் ஓட்டி, மோட்டார்சைக்கிள் ஓட்டுநரின் மரணத்திற்கு காரணமான 89 வயது முதியவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் ஹாலந்து ரோடு - ஜாலான் ஜெலித்தார் சந்திப்பில் காரும் மோட்டார்சைக்கிளும் விபத்துக்குள்ளானதாக தகவல் வந்ததாக காவல்துறை நேற்று தெரிவித்தது.
சம்பவம் குறித்து மாலை 6.40 அளவில் தகவல் வந்ததாகவும் இருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மோட்டார்சைக்கிள் ஓட்டுநரான 30 வயது ஆடவர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னால் அமர்ந்து சென்ற 30 வயது பெண் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது. மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அது கூறியது.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

