இளையர் கையில் தமிழ்; மொழி புழங்க, சிறக்க, நிலைக்க இனி அவர்கள்தான் வழி

இளையர் கையில் தமிழ்; மொழி புழங்க, சிறக்க, நிலைக்க இனி அவர்கள்தான் வழி

4 mins read
7e76eebc-ca13-4582-a379-1c6d13f1aaab
-

சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொ­ழி­யைக் கொண்டாடி வரு­கி­றோம். அது­வும் இந்த ஏப்­ரல் மாதத்­தில் செழித்­தோங்கும் தமிழ்­மொழி விழா­வில் 40க்கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­க­ளோடு திளைக்­கி­றோம்.

தேசிய நூலக வாரி­யம் உட்­லண்ட்ஸ் நூல­கத்­தில் ஓராண்­டுக்­கும் முன் தமிழ்ச் சோலை எனும் பெய­ரில் ஒரு தமிழ்ப் பகு­தியை அமைத்­தது. தமிழ்ச் சோலை­யின் ஓராண்டு நிறைவு இன்று கொண்­டா­டப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் சுதந்­திர நாடா­கி­ய­தும் அன்­றைய அர­சி­யல் தலை­வர்­களும் சமூ­கத் தலை­வர்­களும் அதி­கா­ரத்­துவ மொழி­யா­கத் தமி­ழை­யும் இணைத்து நம் தாய்­மொ­ழியை நிலைப்­ப­டுத்­தி­னர்.

அதி­கா­ர­பூர்வ முறை­யில் நிலை­பெற்று­விட்ட தமிழை அதி­கம் புழங்­கும் மொழி­யாக அடுத்த தலை­மு­றைக்­கும் அதற்கு அடுத்த அடுத்த தலை­மு­றை­களுக்­கும் கொண்டு செல்­லும் பொறுப்பு நமக்கு இருக்­கிறது என்­பதை தெள்­ளத்­தெ­ளி­வாக கவ­னத்­தில் நிலை­நி­றுத்தி இப்­போ­தைய மூத்த தலை­மு­றை­யி­னர் செயல்­ப­டு­கி­றார்­கள்.

எதிர்­கா­லத்­தைப் பற்­றிய சிந்­தனை, அதற்­கான திட்­டம், தொலை­நோக்­குச் சிந்­த­னை­யு­டன் ஆண்­டு­தோ­றும் ஏப்­ரல் மாதத்தை மொழிக்­கா­கவே ஒதுக்கி தமி­ழின் புழக்­கத்தை அதி­கப்­ப­டுத்த அவர்கள் வழி அமைத்துள்ளனர்.

இந்த மொழித் தொண்டை இன்று செய்து வரும் மூத்த சமூ­கத் தலை­வர்­கள் தமிழ்ப் பள்­ளி­கள் செயல்­பாட்­டில் இருந்த காலத்­தில் வளர்ந்­த­வர்­கள்.

அப்பள்ளிகளிலோ மற்ற பொதுப் பள்ளி­க­ளிலோ படித்­து­ வந்­த­தால் மொழி தொடர்பான ஆழ­மான கற்­றல் பின்னணி அவர்­க­ளுக்கு வாய்த்தது. அவர்கள் தமிழ் சர­ள­மா­கப் பேசப்­பட்ட சூழ­லில் வந்­த­வர்­கள்.

அவர்­க­ளின் வீட்­டில் தமிழ்ப் புழக்கம் இயல்­பான ஒன்­றாக இருந்­தது.

ஆனால் இன்­றைய பிள்­ளை­க­ளைக்­கொண்ட தலை­முறை வேறு­பட்ட சூழ­லில் வளர்ந்த ஒன்று. இவர்­களில் பலர் வீட்­டில் தமிழ் பேசு­வதில்லை.

பலர் உயர்­நி­லைக் கல்­வியை முடித்­த­வு­டன் தமி­ழு­டன் உள்ள உற­வை­யும் துண்­டித்­து­வி­டு­கின்­ற­னர் போலும்.

சிலர் ஓரளவு தமிழ் பேசினாலும் தொடர்ந்து எழு­தவோ, படிக்­கவோ அவர்கள் முற்­படு­வ­தில்லை.

இத்­த­கைய நிலை­யில் உள்ள பெரும்­பா­லான பிள்­ளை­க­ளின் கல்விப் பய­ணம் முடிந்­த­வு­டன் அவர்­கள் தொடர்ந்து தமிழ் மொழி­யு­டன் தொடர்­பில் இருப்­பதற்­கான வாய்ப்­பு­களை சமூகம் உரு­வாக்கித் தர­வேண்­டும். தமிழைப் புழங்குவதற்கு உள்ள வாய்ப்பு­க­ள் பற்றி இளை­யர்­களுக்கு எடுத்­துச் சொல்­ல­வேண்­டும். மொழிப் பற்றை அவர்­களிடம் வளர்க்க வேண்டும்.

தொழில்­நுட்­பத்­தின் அதீத வளர்ச்சி­யின் விளை­வா­கக் கிடைத்­துள்ள செயற்கை நுண்­ண­றிவு போன்­றவை நம் வாழ்­வின் இயக்­கத்­தையே மாற்­றக்­கூ­டி­யவை. மொழி­யின் புழக்­கத்­திற்­கும் பயன்­பாட்­டிற்­கும் அத்­த­கைய மாறு­பட்ட வாழ்­வி­யல் உரு­வாக்­கும் சவால்­கள் கணிசமாகவே இருக்கும்.

மனி­த­னின் உத­வியே இல்­லா­மல் மனி­தன் செய்­யக்­கூ­டி­ய­வற்றை இனி இயந்­தி­ரங்­களே செய்­ய­மு­டி­யும் என்ற நிலை வரும். அத்­த­கைய இயந்­திர யுகத்­தில் மனி­தத்­தன்­மை­யை­யும் பண்­பாட்­டை­யும் நிலைக்­கச் செய்­வது மேலும் அத்­தி­யா­வ­சி­ய­மான ஒன்­றாக அமை­யும்.

உணர்­வு­க­ளை­யும் உணர்ச்­சி­களை யும் இரண்­டாம்பட்­ச­மாக்­கி­விட்டு, தேவை­யான பணியை ஆக்­க­க­ர­மாக, துரி­த­மாக செய்­ய­வேண்­டும் என்­ப­தில் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்­துகின்ற, உற்­பத்­தித்­தி­றனை, போட்­டித்­தி­றனை மைய­மா­கக்கொண்ட வாழ்வே எதிர்­கா­லத்­தில் அமை­ய­லாம்.

அத்­த­கைய நிலை­யில் மனி­த­னாக நாம் வாழ்­வ­தற்­கும் பண்­பாட்­டு­டன் விளங்­கு­வ­தற்­கும் நம் தாய்­மொ­ழி­யான தமிழ்­மொ­ழி­தான் நமக்குக் கைகொ­டுக்­கும் என்­பதில் ஐய­மில்லை.

இன்­றைய வணிக யுகத்­தில் வாழ்க்கைத்தொழில் வளர்ச்­சி­யையும் வரு­மானத்­தை­யும் நோக்­க­மா­கக் கொண்டு வாழ்­கி­றோம். இதுவே சரி­யா­ன­தாக இருக்­க­லாம்.

ஆனால் அதற்­கா­க தாய்­மொழி­யைப் புறக்கணித்துவிட்டு அதை அடைய முற்­ப­டு­வது என்­பது, பத்­தோடு பதி­னொன்று அத்­தோடு இதுவும் ஒன்று என்ற வாழ்க்­கை­யா­கவே நம் வாழ்க்கை அமைந்­து­வி­டும்.

நல்ல வேலை, நல்ல சம்­ப­ளம், வாழ்க்கை வசதிகள் என்று அவற்றை விரட்­டிக்­கொண்டே போகும் நாம், சரா­ச­ரி­யாக நாற்­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலா­க­வும் அவற்றை விரட்­டிக் கொண்டேதான் இருப்­போம்.

அந்­தக் கால­கட்­டத்­தில் தமிழ்­மொழியை முற்­றி­லும் புழங்­காமல் இருந்து பின்­னர் ஓய்­வு­பெ­றும் காலத்திலோ பிற்­கா­லத்­திலோ நாடினால் அந்த மொழி கைகூடி வருமா?

ஒரு மொழி­யின் நிலை அதன் புழக்­கத்­தில்­தான் உள்­ளது. புழங்­காமல் போனால் மெல்ல மெல்ல அது அழிந்து­தான் போகும்.

அர­சாங்­கம் இன்றுவரை தமிழ் மொழிக்­காக செல­வி­டும் வளங்­கள் ஏரா­ளம். இன்று வீதி­களில், ஊட­கங்­களில், நாடா­ளு­மன்­றத்­தில், அர­சாங்­கத்­தில், அர­சாங்க அமைப்­பு­களில், நூலகங்­களில் தமிழ் இருப்­பதை அர­சாங்­கம் உறுதி செய்­கிறது.

ஆனால் வீடு­களில் மட்­டும் இன்னும் தமிழ் புழக்­கத்தை அதி­க­ரிக்க நம்மால் முடிய­வில்­லை. ஏதா­வது பெயர் பல­கை­களில் தமிழ் மொழி இடம்­பெ­ற­வில்லை என்றால் கொந்­த­ளித்து எழு­கி­றோம்.

அதுபோல தமிழ் இல்­லங்­களில் தமிழ் ஒலிக்கச் செய்ய என்ன செய்யலாம்?

தமி­ழர் நடத்­தும் கடைகளுக்கு முன்­பு­போல தமிழ்ப் பெயர்­க­ளைக் காண­முடிவ­தில்லை. தமிழ்க் குடும்­பங்­களில் பிறக்கும் குழந்­தை­க­ளுக்­குத் தமிழ்ப் பெயர்­கள் சூட்­டு­வதும் குறைந்துவிட்டது.

முந்­தைய தலை­முறை நமக்கு விட்டுச்­சென்­றுள்ள தமிழ் மொழியை இளை­யர்­கள் அடுத்­த தலை­மு­றைக்­குக் கொண்டுசெல்­ல­வேண்­டும். அதற்கு நம் முன்­னோர்­கள் ஏற்­கெனவே எடுத்­துள்ள முயற்­சி­களைத் தொடர்ந்து மேலும் பெரும்­பங்கை நாம் ஆற்­ற­வேண்­டும். அப்­படிச் செய்­யா­விடில் நாம் நம் தாய் மொழி­க்கு இழைக்­கும் துரோ­க­மாக அது அமைந்­து­வி­டும்.

எதிர்­காலத் தலை­முறை நம்மைச் சபிக்­கும் நிலை ஏற்­ப­டா­மல் தமிழ்­மொழியை நிலைக்­கச் செய்­யும் பொறுப்பை உணர்ந்து மொழிப் புழக்­கத்தை நோக்­க­மா­கக் கொண்டு தீவிரமாக செயல்­பட உறுதிபூணுவோம்.

இர்ஷாத் முஹம்மது

செய்தி ஆசிரியர்