அங் மோ கியோவில் வசிக்கும் தந்தையர், தங்கள் பிள்ளைகளுடன் அணுக்கமாகப் பாசப்பிணைப்பைப் பேணி வளர்க்க உதவும் நோக்கத்துடன் 'வாழ்க்கைக்குத் தந்தை' என்ற செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
குடும்ப தினத்தை முன்னிட்டு கெபுன் பாரு சமூக மன்றத்தில் நேற்று அந்தச் செயல்திட்டம் தொடங்கப்பட்டது.
அதில் பிரதமர் லீ சியன் லூங்கும் ஏறக்குறைய 1,500 குடியிருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
தந்தையர் தங்கள் பிள்ளைகளின் வாழ்வில் நல்ல செல்வாக்கைச் செலுத்தும் வகையில் தந்தையரை ஈடுபடுத்தி, ஊக்கமூட்டி உருவாக்கும் நோக்கத்தில் இடம்பெறக்கூடிய ஒரு தேசிய இயக்கமாக வாழ்க்கைக்குத் தந்தை செயல்திட்டம் உள்ளது.
பிள்ளைகளின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தையின் தாக்கம் மிக முக்கியமானது என்பதை கெபுன் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்றி குவெக் நேற்று சுட்டிக்காட்டினார்.
அந்த இயக்கத்தையொட்டி தந்தையுடன் காலை சிற்றுண்டி, தந்தை-பிள்ளை அனுபவ பயிலரங்குகள் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கும் ஜூன் மாதம் முதல் ஏற்பாடு செய்யப்படும்.
தற்காப்புக் கலை அம்சங்களும் நேற்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்று இருந்தன.
அரசாங்கச் சேவையாளரான பிரேம் ராஜ், 38, என்பவர் நேற்றைய நிகழ்ச்சியில் தன்னுடைய ஏழு வயது புதல்வி ரேயாவுடன் கலந்துகொண்டார்.
"தாயாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது முக்கியமானது.
"இதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கிறது," என்று அவர் கூறினார்.

