அனுஷா செல்வமணி
தமிழ்மொழியில் பொதிந்துள்ள எழிலை மிக எளிமையான பாணியில் எடுத்துக் கூறினார் அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் புலமையுடைய தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா. உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளையும் தமிழ்மொழி சார்ந்த கருத்துகளையும் அவர் சிறப்பாக எடுத்துரைத்தார்.
கழிபெருங் காரிகை: திருக்குறளில் (ன்) அழகு என்ற தலைப்பில் தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில், சிங்கப்பூரின் ஆகப் பெரிய தமிழ் இலக்கிய தொகுப்பான தமிழ்ச் சோலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டிய நிகழ்வில் திரு தாமஸ் கலந்துகொண்டார்.
நேற்று உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துக்கொண்டனர்.
ஜப்பானிய அமெரிக்கரான திரு தாமஸ், தமிழ்மொழியில் சரளமாகப் பேசுவதோடு திருக்குறள் பற்றி உரையாற்றிப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
வளர்தமிழ் இயக்கத்தின் உறுப்பினரான இலக்கியா செல்வராஜி, நிகழ்வின் இறுதியில் கேள்வி-பதில் அங்கத்தை வழிநடத்தினார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு சிந்தனையைத் தூண்டும் வகையில் பதிலளித்த திரு தாமஸ், தமிழ்மொழியின் அழகை இளையர்களுக்கு சுவாரசியமான வடிவில் எடுத்துக்கூறுவதால் அவர்களின் மொழிப் புழக்கத்தை அதிகரிக்கலாம் என வலியுறுத்தியதோடு திருக்குறள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கைக்குப் பொருந்தும் என பெருமையுடன் கூறினார்.
தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழி சேவைகளுக்கான தலைவர் அழகிய பாண்டியன், "தமிழ்ச் சோலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி மட்டுமின்றி, பொதுமக்கள் தமிழ்ச் சோலையில் சேர்க்கப்பட்ட புதிய அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்," என்றார்.
"தாமஸ் சிங்கப்பூருக்கு வரப்போகிறார் என்று கேள்விப்பட்டவுடனே நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் தமிழ்மொழியில் சரளமாகப் பேசும்போது எனக்கு இவரைப்போல ஒரு நாள் பேச வேண்டுமென்ற உத்வேகம் பிறந்துள்ளது," என பகிர்ந்துகொண்டார் கடந்த ஈராண்டுகளாக தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு வரும் சீனரான 31 வயது யாப் ஜூன் ஹாங்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் 34 வயது ரேவதி சீனிவாசன், "தமிழ் இனத்தைச் சேராத ஒருவர் நம் மொழியை சிறப்பாகக் கற்றுப் பேசும்போது, தமிழராகப் பிறந்த நாம் தமிழில் பேச தயங்கக்கூடாது என்பதற்கு ஒரு சிறந்த முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது," என்று கூறினார்.

