சிண்டாவின் நோன்புப் பெருநாள் பிரகாசம்

சிண்டாவின் நோன்புப் பெருநாள் பிரகாசம்

2 mins read
03c8dd10-798b-4c15-aaa0-9cca5b1a305c
-

சபிதா ஜெய­கு­மார்

முதன் முறை­யாக நோன்­புப் பெரு­நாள் கொண்­டாட்­டங்­க­ளின் ஆயத்தப் பணி­களில் சமூ­கத்­தின் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உதவி நல்­கி­யுள்­ளது சிண்டா எனும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம்.

நோன்­புப் பெரு­நாள் காலத்­தின்­போது இல்லாமையால் தவிப்­ப­வர்­களும் பண்­டி­கைக்­கால இன்­பங்­க­ளைப் பெற வேண்­டும் என்ற மகத்­தான நோக்­கத்­து­டன் நேற்று 'புரோ­ஜெக்ட் ஷைன்' வீட்டு மேம்­பாட்­டுப் பணி­களில் தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­பட்­ட­னர்.

2020ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட 'புரோ­ஜெக்ட் ஷைன்' திட்­டம், 50க்கும் மேலான தொண்­டூ­ழி­யர்­கள், ஆத­ர­வா­ளர்­க­ளின் துணை­யு­டன் 18 வீடு­கள் தீபா­வ­ளிக் கொண்­டா­ட்டங்­க­ளுக்­காக சுத்­தப்­ப­டுத்­தப்­பட்­டன.

கொவிட்-19 கிறு­மித்­தொற்று ஏற்­ப­டுத்­திய ஈராண்டு இடை­வே­ளைக்­குப் பிறகு மீண்­டும் தொடர்­கிறது சிண்­டா­வின் இந்­தச் சமூக முயற்சி. இவ்­வாண்டு 'புரோ­ஜெக்ட் ஷைன்' திட்­டம் நோன்­புப் பெரு­நாள், தீபா­வளி, கிறிஸ்­து­மஸ் என மூன்று பண்­டி­கை­க­ளை­யும் கொண்­டா­டும் குடும்­பங்­க­ளுக்கு விரி­வாக்­கப்­பட்­டுள்­ளது.

ஞாயிற்­றுக்­கி­ழமை என்றும் பாரா­மல் ஏறத்­தாழ 60 தொண்­டூ­ழி­யர்­கள் தீவு முழு­வ­தும் சென்று கிட்­டத்­தட்ட 20 வீடு­களில் அழ­கூட்­டும் பணி­களில் இறங்­கி­னர்.

சிண்டா இளை­யர் மன்­றம், சிண்டா அமைப்பு, இஷ்­டாரா அற­நி­று­வ­னம் ஆகி­ய­வற்றைச் சேர்ந்த தொண்­டூ­ழி­யர்­கள் இச்­சமூக முயற்­சிக்­கா­கத் திரண்­ட­னர். இஷ்­டாரா அற­நி­று­வ­னம் சுத்­தம் செய்யத் தேவைப்­படும் பொருள்­களை வழங்கி ஆத­ர­வ­ளித்­தது.

"இந்­தத் திட்­டத்­தின் மூலம் பண்­டி­கைக் காலத்­தின்­போது வீட்­டின் முக்­கிய அம்­ச­மான சுத்­தத்தை வசதி குறைந்த இல்­லங்­க­ளுக்கு வழங்க முடிந்­தது. எங்­கள் முயற்­சி­க­ளுக்கு பல தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்தும் ஆத­ரவு கிடைத்து வரு­கிறது," என்று கூறி­னார் சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன்.