செய்திக்கொத்து

3 mins read
5446bf3e-c872-46ba-a21a-dfdfc20b923c
-

தெம்பனிஸ் வீட்டில் தீ: மருத்துவமனைக்கு ஐவர் கொண்டு செல்லப்பட்டனர்

தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடு ஒன்றில் நேற்றுக் காலை நிகழ்ந்த தீச் சம்பவத்தைத் தொடர்ந்து 5 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு 8.35 மணிக்குத் தகவல் கிடைத்தது.

தெம்பனிஸ் புளோக் 645B, ஸ்திரீட் 62ன் 13வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ ஏற்பட்டதாகவும் அது தீயணைப்புக் கருவிகள் கொண்டு அணைக்கப்பட்டதாக வும் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் செல்வதற்கு முன்னரே அந்த வீட்டில் இருந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட னர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நான்கு பேரும் கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் ஒரு வரும் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடற்கொள்ளையர்கள் ஏறிய சிங்கப்பூர் கப்பல் கண்டுபிடிப்பு: சிப்பந்திகள் நலம்

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 'தி சக்சஸ் 9' எனும் கப்பல் ஐவரி கோஸ்ட்டுக்கு 570 கிலோமீட்டருக்கு அப்பால் கடலில் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த திங்கட்கிழமை கடற்கொள்ளையர்கள் அக்கப்பலில் ஏறிவிட்டனர். நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கப்பலில் பணியாற்றிய சிங்கப்பூரர் ஒருவர் உட்பட 20 சிப்பந்திகளும் பத்திரமாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது.

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், ரசாயனம் மற்றும் எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பலான அது, அபிட்ஜான் நகரில் கடற்பகுதியில் 'மொன்ஜாசா ஸ்பிரின்டர்' எனும் வர்த்தக கப்பலால் கண்டுபிடிக்கப் பட்டது என்று தெரிவித்தது.

உதவி கேட்கும் அழைப்பு சமிக்ஞையைப் பெற்ற வர்த்தகக் கப்பல், ஆணையத்துக்குத் தகவல் கொடுத்தது. ஐவரி கோஸ்ட் கடற்படையின் சுற்றுக்காவல் படகு அங்கு அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட கப்பலில் ஏறிய கடற்படை அதிகாரிகள், சிப்பந்திகள் அனைவரும் பாதுகாப்பாகவும் உடல்நலத்துடன் இருப்பதாகவும் கூறியது. இப்போது அந்தக் கப்பல் அபிட்ஜான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றிய 96 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டன

குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றிய காணொளிகள் தொடர்பான புதிய சட்டங்கள் 2020ல் அறிமுகம் கண்டதி லிருந்து, காவல்துறை இதுவரை பலரைக் கைது செய்து அவர்களிடமிருந்து அந்தக் குற்றச்செயல்கள் பற்றிய ஆயிரக்கணக்கான கோப்புகளைக் கைப்பற்றியுள்ளது. அதில் ஆக மோசமான சம்பவத்தில் தொடர்புடைய 36 வயது ஆடவர், குழந்தை ஆபாசக் காணொளிகளைப் பார்ப்பதில் தீராத ஆவல் கொண்டவர் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பான 13,600 கோப்புகளை வைத்திருந்த அன்சாரி அப்துல் அமின் எனும் அந்த ஆடவருக்கு கடந்த மாதம் ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்துக்குப் பிறகு குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பில், 96 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

உபின் தீவில் காணாமற்போனவரின் உடல் ஏரியில் கண்டுபிடிப்பு

உபின் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போன சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசிய சேவையாளரின் உடல் அத்தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு மிதந்ததை அவரைத் தேடிக்கொண்டிருந்தோர் கண்டனர். பின்னர் குடிமைத் தற்காப்புப் படையின் முக்குளிப் பாளர்கள் அந்த உடலை வெளியே கொண்டு வந்தனர். உடலைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர்.

22 வயதான அவர் தெம்பனிஸ் தீயணைப்பு நிலையத்தில் சேவையாற்றினார். அவரைக் காண வில்லை என்ற தகவல் காவல்துறைக்கு சனிக்கிழமை பிற்பகல் 12.33 மணிக்குக் கிடைத்தது.