தமிழர் பேரவையின் இளையர் பிரிவின் ஏற்பாட்டில் உலா-LA இயற்கை உலா தொடரின்கீழ் ஐந்தாவது முறையாக உலா-LA நடைப்பயணம் நடத்தப்பட்டது. இம்மாதம் 8ஆம் தேதியன்று இடம்பெற்ற இந்த இயற்கை நடைப்பயணம், கரையோரப் பூந்தோட்டங்களிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா வரை ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்தது.
"சுறுசுறுப்பான ஒரு வாழ்க்கைமுறைக்கு வழிவகுக்கும் வகையிலும் புதியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கும் வகையிலும் இது அமையும் என நம்புகிறேன்," என்று தமிழர் பேரவையின் இளையர் பிரிவின் தலைவர் ஷெரீன் பேகம், 23, கூறினார்.
இயற்கை உலாவில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் பதிவுசெய்தோரில் சுமார் 35 பேர் நடைப்பயணத்தில் பங்கேற்றனர். 18 வயது முதல் 25 வயது வரையிலான இளையருக்காக இத்தகைய இயற்கை உலாக்கள் நடத்தப்படுகின்றன.
"இந்த நடைப்பயணத்தில் கலந்துகொள்வது எனக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. தமிழ் இளையர் சமூகத்தில் உள்ள பலரைச் சந்தித்து தமிழ் சமூகம் சார்ந்த அம்சங்களைப் பற்றி பேசியவாறு நடைப்பயணம் மேற்கொண்டது சுவாரசியமாக அமைந்தது," என்று யாழினி கமலக்கண்ணன், 17, கூறினார்.
முதன்முதலில் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த உலா-LA நடைப்பயணம். உலா-LA இயற்கை உலா தொடரின்கீழ் தொடர்ந்து மேலும் பல நடைப்பயணங்களை ஏற்பாடு செய்யும் திட்டத்தில் தமிழர் பேரவையின் இளையர் பிரிவு உள்ளது.
அடுத்த மாதத்திலிருந்து கோலிவுட், பாலிவுட் பாடல்களுடன் ஸும்பா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூகப் பிணைப்பை மேம்படுத்தும் நோக்கிலும் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
செய்தி: கருணாநிதி துர்கா

