நீர்ப்பந்துக் குழுவில் பொதுவாக கோல் காப்பாளர்தான் ஆக உயரமானவராக இருப்பார். ஆனால் மௌனிஷா தேவியின் உயரம் 1.57 மீட்டர் மட்டுமே. இருப்பினும், அவர் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் உயர உயரச் சாதித்து வருகிறார்.
சிங்கப்பூர் மகளிர் நீர்ப்பந்து குழுவின் முதல் இந்திய கோல் காப்பாளர் இவர்.
"என் குழுவில் நான்தான் ஆகச் சிறிய உருவம் கொண்டவர். அதனால் நான் கோல் காப்பாளராக இருப்பது வழக்கத்திற்கு மாறானதுதான்," என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவத்துறை மாணவி மௌனிஷா, 23.
"கோல் காப்பாளர்கள் கையாளும் உத்திகள் தனித்துவம் மிக்கதாக இருக்கும். என் உயரத்தை ஈடுகட்டும் விதமாக நான் என் துடிப்புமிக்க தன்மையையும் நிற்கும் விதத்தையும் பயன்படுத்திக்கொள்வேன். உயரமான கோல் காப்பாளர் செய்யக்கூடிய தவறுகளை என்னால் செய்ய முடியாது. அதனால் என் உத்தி சிறந்ததாக இருப்பதை நான் உறுதிசெய்வேன்," என்றார் அவர்.
தன் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள சக விளையாட்டாளர்களிடமும் பயிற்சியாளர்களிடமும் ஆலோசனை கேட்பதுடன் தொடர்பயிற்சியில் ஈடுபட்டும் வருகிறார் மௌனிஷா.
கம்போடியாவின் நோம்பென் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்காக தேசிய குழு தயாராகிவரும் நிலையில் மௌனிஷா வாரத்தில் குறைந்தது ஒன்பது முறையாவது காலாங்கில் உள்ள ஓசிபிசி நீர்விளையாட்டு நிலையத்தில் பயிற்சி செய்து வருகிறார்.
தேசிய குழுவில் ஐந்தாண்டுகளாக இருக்கும் மௌனிஷா, தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்பது இது இரண்டாவது முறை.
குழுவின் தயார்நிலையை கொவிட் பெருந்தொற்று பாதித்தபோதும் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு திறன்வாய்ந்த எதிரணிகளுடன் மௌனிஷாவும் அவர்குழுவினரும் விளையாடி வருகின்றனர்.
"பிலிப்பீன்சில் நடந்த 2019 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் எங்கள் குழு வெள்ளிப் பதக்கம் வென்றது. அதையடுத்து எனக்குக் கூடுதல் அனுபவம் கிடைத்திருப்பதோடு என் காயங்களிலிருந்து நான் பாடங்கள் பலவற்றையும் கற்றுள்ளேன். வெவ்வேறு கோல் காப்பாளர்களின் ஆட்டத்தையும் நான் நன்கு கவனித்திருக்கிறேன்," என்றார் மௌனிஷா.
தாய்லாந்தைத் தன் குழு இம்முறை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் இவர்.
"எங்களுக்கிடையே பல காலமாகவே இந்தப் போட்டி இருந்து வருகிறது. 2015ல் சிங்கப்பூரில் ஆடிய ஆட்டத்தில் தங்கத்தை நாங்கள் அவர்களிடம் இழந்தோம். கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த அனைத்துலக நீர்ப்பந்து கிண்ணத்துக்கான போட்டியில் 9-4 என்ற கோல் கணக்கில் நாங்கள் தாய்லாந்தை வென்றோம். அதுவே எங்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. இனி, கம்போடியாவில் எங்களின் திட்டங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்தி, எங்களை நிதானப்படுத்தி, ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி ஆடவேண்டியதுதான்," என்று நம்பிக்கையுடன் கூறினார் மௌனிஷா.
நீர்ப்பந்து விளையாட்டை சிங்கப்பூரின் இந்திய பெண்கள் தேர்ந்தெடுப்பது அரிது என்று கருதும் இவர், தான் தற்செயலாகத்தான் இவ்விளையாட்டில் ஈடுபடத் தொடங்கியதாகப் பகிர்ந்துகொண்டார்.
நன்கு நீந்தத் தெரியாமல் தொடக்கநிலை ஐந்தில் நீச்சலை முழுமையாகக் கைவிட்டவர் மௌனிஷா. இருப்பினும் நண்பர் ஒருவரின் வற்புறுத்தலால் பள்ளி நீர்ப்பந்து தேர்வுச் சுற்றில் பங்கேற்று இறுதியில் தேசிய குழுவரை சென்றுவிட்டார் இந்தத் துணிச்சல்மிக்க நங்கை.
வகுப்புகளுக்கு அப்பால் நீர்ப்பந்துக்கான பயிற்சி வகுப்புகளுக்கும் செல்வதால் மௌனிஷாவுக்குப் போதிய ஓய்வு கிடைக்காது என்று அவரின் தந்தை மாதவன் மணிவண்ணன் அஞ்சினார்.
இருப்பினும் மௌனிஷாவின் தாயார் சாரதா தேவி, மகளை காரில் சென்று விடுவதும் அழைத்து வருவதுமாக பயண நேரத்தைக் குறைக்க உதவினார்.
"ஆனால் படிப்பையும் விளையாட்டையும் சமாளிப்பது பெரும் சவாலே. சிங்கப்பூரர்கள் தாய்லாந்து நாட்டவர்களைப் போல் முழுநேர விளையாட்டு வீரர்களாக இருப்பதில்லை. இருப்பினும் நானும் என் குழுவினரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதில் ஆறுதல் அடைகிறோம்," என்றார் மௌனிஷா.
தேசிய குழுவில் நிரந்தர உறுப்பினராகச் சேர்வதற்காக இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. நண்பர்களுடனான ஒன்றுகூடல்களைத் தவிர்த்தார்.
"இருப்பினும் இது பெரிய தியாகமாக எனக்குத் தோன்றவில்லை. என் குழுவினர் எனக்கு இன்னொரு குடும்பம்," என்றார் அவர்.
"அனைவரும் போட்டித்தன்மையுடன் விளையாடுவதால் நீர்ப்பந்து பார்ப்பதற்கு முரட்டுத்தனமாகத் தோன்றலாம். ஆனால் நல்ல அனுபவம் தரக்கூடியது இந்த விளையாட்டு. கட்டொழுங்கு, கடும் உழைப்பு, குழு உணர்வு போன்ற பண்புநலன்களை இவ்விளையாட்டுவழி கற்றுக்கொள்ளலாம்," என்றார் இந்த இளையர்.

