குழாய் பழுதுபார்ப்போர் (பிளம்பர்), மின்சாதன பணியாளர்கள், குளிர்சாதன தொழில்நுட்பர் ஆகியோர் விரிவுபடுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளைப் பெற உள்ளனர். தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) இந்தத் துறைகள் தொடர்ந்து உள்ளூர் ஊழியர்களைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் செயல்படுகிறது.
ஊழியர் உரிமைகள், நலன்களை மேலும் பாதுகாக்கும் வகையில் என்டியுசி வேலை வாய்ப்புகள் விரிவாக்கம், பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களுக்கு ஆதரவு, ஊழியர்கள் போட்டித்தன்மையுடன் இருக்க உதவும் பயிற்சிகள் ஆகியவற்றைப் பரிசீலிக்கும் என்று தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணைப் தலைமைச் செயலாளரான திரு டெஸ்மண்ட் டான் கூறியுள்ளார்.
அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு டான், என்டியுசி முக்கியத்துவம் அளிக்கும் மூன்று பகுதிகளை எடுத்துரைத்தார்.
முதல் கவனம் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது என்று பிரதமர் அலுவலக துணை அமைச்சருமான திரு டான் கூறினார். இதில் என்டியுசி முன்னுரிமை அளிக்கும் இரு பிரிவினராக, திறமையான அத்தியாவசியத் தொழில்களில் உள்ள ஊழியர்கள், இளைய ஊழியர்கள் ஆகியோரைக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் மூன்று அத்தியாவசிய தொழில்களான குழாய் பழுதுபார்ப்போர் (பிளம்பர்), மின்சாதன பணியாளர்கள், குளிர்சாதன தொழில்நுட்பர்கள் ஆகி யோருக்கும் தொழிற்சங்கம் முன்னுரிமை அளிக்கும் என்றார் திரு டான்.
இத்துறைகளுக்கிடையே வேலையிடப் பயிற்சிகள், வழிகாட்டிகளுடன் இளையர்களை இணைக்கவும் என்டியுசி திட்டமிட்டுள்ளது.
இரண்டாவது, ஊழியர்களின் முக்கிய கவலைகளான வாழ்க்கைச் செலவுகள் போன்றவற்றுக்கு ஆதரவளிப்பது. வேலைப் பாதுகாப்பு, வேலையில்லாதோருக்கு ஆதரவு, போதிய ஓய்வூதியம், பராமரிப்பு ஆதரவு போன்ற இடைக்கால மற்றும் நீண்டகால சிக்கல்களைத் தீர்க்க தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளது.
படிப்படியான சம்பள உயர்வு முறையின் கீழ் அதிகமான ஊழியர்களை சேர்க்க தொழிலாளர் இயக்கம் தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருகிறது.
வேலை இழந்தவர்களுக்கான வருமான ஆதரவுக்கு தொழிற்சங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகக் கூறினார் திரு டான். தொழில்துறை மாற்றங்கள், மறுசீரமைப்பு போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நடுத்தர ஊழியர்களுக்கு உதவும் வகையில் வேலை தேடுதல், மறுதிறன் பயிற்சி ஆகியவற்றில் உதவி அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
மூன்றாவதாக, வேலைக்குப் பொருத்தமானவராகவும், போட்டித்தன்மையுடன் திகழ இருக்கும் திறன்களை ஆழப்படுத்தி புதிய திறன்களை வளர்ப்பதன் மூலம் மாறிவரும் வேலைச் சந்தையின் வேலை மாற்றங்களைக் கையாளுவதற்குத் ஊழியர்களுக்கு என்டியுசி ஆதரவளிக்கும் என்று திரு டான் கூறினார்.
நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைப்பதற்கு என்டியுசி உடன் இணைந்து பணியாற்றுமாறு அனைத்து முதலாளிகளுக்கும் தொடர்ந்து அழைப்பு விடுப்பதாகவும் திரு டான் தெரிவித்தார்.

