போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த முன்னாள் நிறுவன உரிமையாளரான லியான் ஹோ ஹெங், 56, மலேசியாவில் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூர் கொண்டு வரப்பட்ட அவர் மீது நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
காணொளி வழியாக முன்னிலையான லியான் மரண தண்டனையை எதிர்நோக்குகிறார்.
'அக்ரா' எனப்படும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தரவுகளை ஆராய்ந்தபோது சுவான் ஹப் செங் டெண்டேஜ் கன்ஸ்ட்ரக்ஷன், லோங் செங் சேர்ஸ் அண்ட் டேபிள் ரெண்டல் எண்டர்பிரைஸ் என்ற இரு நிறுவனங்களை அவர் நடத்திவந்தது தெரிந்தது.
2018 நவம்பர் 19ஆம் தேதியிலிருந்து லியான் சிங்கப்பூரில் இல்லை என்று முன்னர் வெளியிட்ட அறிக்கையொன்றில் சிஎன்பி எனும் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்திருந்தது.
2020 அக்டோபர் 7ஆம் தேதிவாக்கில் டான் குவோஷெங், 26 என்ற நபரிடம் கடத்துவதற்காக குறைந்தது 253 கிராம் மிதாம்பீட்டமைனை (methamphetamine) அவர் வைத்திருக்கச் சொன்னதாகத் தெரிகிறது. இதன் பிறகு தாமான் கெம்பங்கான் அருகேயுள்ள ஜாலான் செலாமட்டில் உள்ள வீட்டின் முன்பு சிங்கப்பூரரான டானும் போதைப்பொருளுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மீது ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
டான் கைது செய்யப்பட்டதை அடுத்து லியானுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்தது.
அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க வெளிநாட்டு அதிகாரிகளின் உதவி நாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2023 மார்ச் 31ஆம் தேதி மலேசியாவில் லியானை அந்நாட்டின் காவல் துறையினர் கைது செய்தனர். அடுத்த மாதமே சிங்கப்பூரின் சிஎன்பி அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
சிஎன்பியின் நடவடிக்கை களுக்கான துணை இயக்குநரான மூத்த உதவி ஆணையர் லியோன் சான், சிங்கப்பூரின் சட்ட அமலாக்கத்திலிருந்து தப்பி வெளிநாட்டில் ஒளிந்துகொள்ளலாம் என்று போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பாதுகாப்பான புகலிடம் இல்லை என்பதை அவர்கள் இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
லியானின் வழக்கு ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.