கருணாநிதி துர்கா
அதிபர் ஹலிமா யாக்கோப் முன்னிலையில் நேற்று 85 பேர் சமாதான நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். நேற்று இந்தப் பதவியேற்பு விழா இஸ்தானாவில் அரசு நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியான வின்சென்ட் ஹூங் முன்னிலையில் நடைபெற்றது.
தங்களது பணியிலும் பொதுச் சேவையிலும் சமூக பணியிலும் சமூகத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சிங்கப்பூரர்களே சமாதான நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
சமாதான நீதிபதியாக பதவியேற்றதை மிகவும் பெருமைக்குஉரியதாக கருதும் சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளார்.
"நான் சமூகத்திற்கு இதுவரை ஆற்றிய பணி அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனது கடின உழைப்பிற்கான முழுமையான அர்த்தம் கிடைத்துள்ளதாக உணர்கிறேன்," என்று திரு அன்பரசு கூறினார்.
சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக விளங்குவதோடு இன்று மக்களுக்கு உதவ தனக்கு கூடுதலாக மதிப்பிற்குரிய சமாதான நீதிபதி என்ற தளம் வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார் இவர்.
ஒரு சமாதான நீதிபதியாக சிறைச்சாலைகளுக்கு வருகையளிக்கும் நீதிபதியாகவும் நீதிமன்றத்தில் சமரச நடுவராகவும் பணியாற்றுவார் திரு அன்பரசு.
அதுமட்டுமல்லாமல், திருமணப் பதிவகத்தின் மூலம் திருமண உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதலை வழிநடத்துபவராகவும் இவர் சேவையாற்றுவார்.
"மேலும் தொடர்ந்து சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஊக்கத்தை இப்பதவி கொடுப்பதோடு மற்றவர்களுக்கு நான் ஒரு முன்னுதாரணமாக விளங்குவேன் என நம்புகிறேன்," என்றும் திரு அன்பரசு கூறினார்.
சமாதான நீதிபதிகளாக நியமனம் பெற்ற 85 பேரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும். அவர்களில் 60 சமாதான நீதிபதிகள் மறுநியமனம் பெற்றவர்கள். 25 பேர் புதிதாக நியமனம் பெற்றவர்கள்.

