உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகளில் ஜூன் 1 முதல் கடுமையான நடவடிக்கை
எதிர்வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் காப்பிக் கடைகளிலும் உணவங்காடி நிலையங்களிலும் உணவு நிலையங்களிலும் உணவு உண்ட பிறகு, மேசையில் தாங்கள் பயன்படுத்திய தட்டுகள், கரண்டிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, அதற்குரிய இடங்களில் வைக்காதவர்களுக்கு எதிராக தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்வோர், உடனடியாக தாங்கள் பயன்படுத்திய தட்டுகள், கரண்டிகள் ஆகியவற்றை உரிய இடத்தில் வைக்க அறிவுரை வழங்கப்படுவதற்கு பதிலாக, முதல் முறை அந்தத் தவற்றைச் செய்வோருக்கு எழுத்துபூர்வ எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று கூறியது. அதே தவற்றை மீண்டும் செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம்.
உணவங்காடி நிலையங்களில் உணவுக்குப் பிறகு மேசையைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று 2021, செப்டம்பர் 1ஆம் தேதியன்றும், காப்பிக் கடைகள், உணவு நிலையங்கள் ஆகியவற்றில் உணவுக்குப் பிறகு மேசையைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று ஜனவரி 1ஆம் தேதி இரு அமைப்புகளும் அறிவித்ததில் இருந்து இதுவரை யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை அல்லது எவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. இருப்பினும், கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை, அதிகாரிகள் கூறும் ஆலோசனையைப் பின்பற்றாத இருவருக்கு எழுத்துபூர்வ எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
நல்ல உணவுப் பழக்கத்தை மக்களுக்கு ஆழமாகப் பதிய வைக்கவும் உணவுக்குப் பிறகு மேசையில் தாங்கள் பயன்படுத்திய தட்டுகள், கரண்டிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த தவறும் சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கு அதை மீண்டும் வலியுறுத்தவுமே இந்தக் கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் சுற்றுப்புற வாரியம் தெளிவுபடுத்தியது.
உடற்குறையாளர்கள், முதியோர், பிள்ளைகள் ஆகியோரால் மேசையில் உள்ளவற்றை அப்புறப்படுத்த முடியாது என்பதால் அவர்களுக்கு எதிராக தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் அமலாக்க நடவடிக்கை எடுக்காது என்றும் விளக்கப்பட்டது.
மேலும், பொது இடங்களில் குப்பை போடுதலுக்கு எதிராகக் கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கவும் பரிசீலித்து வரும் தேசிய சுற்றுப்புற வாரியம், குப்பை போடுபவர்களைப் பிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளது.
அவ்வாறு குப்பை போட்டு முதல் முறையாகப் பிடிபடுபவர்களுக்கு $300 அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் அக்குற்றத்தைப் புரிவோர் நீ்திமன்றத்தில் நிறுத்தப்பட்டு, சீர்திருத்த வேலை ஆணை பிறப்பிக்கப்படலாம்.
அவ்வாறு ஆணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மூன்று முதல் 12 மணிநேரம் பொது இடங்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

