ஆற்றலை மேம்படுத்தும் திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூரும் பிரேசிலும் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளன.
பருவநிலை மாற்றத்தில் சேர்ந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன. 2025 சிஓபி30 அனைத்துலக பருவநிலை மாநாட்டை ஏற்றுநடத்த பிரேசில் எடுத்துவரும் முயற்சிக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளது.
இதன் பொருட்டு, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் பிரேசிலிய வெளியுறவு அமைச்சர் மவ்ரோ வியேராவும் பிரேசில்-சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டம் குறித்த இணக்கக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டதாக இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
லத்தீன் அமெரிக்கா, கரீபிய, ஆசிய பசிபிக் வட்டாரங்களில் உள்ள வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஆற்றலை மேம்படுத்தும் திட்டங்களைக் கூட்டாகச் சேர்ந்து வழங்குவதில், சிங்கப்பூருக்கும் பிரேசிலுக்கும் இடையேயான ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது இத்திட்டத்தின் நோக்கம்.
டாக்டர் பாலகிருஷ்ணன், பிரேசிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
தங்களது முதல் அரசியல் ஆலோசனைச் சந்திப்பின் ஓர் அங்கமாக நேற்று முன்தினம் திரு வியேராவை அவர் சந்தித்தார்.

