செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e2178601-7e67-4628-a890-bd68ba519a43
-

13 வயதுச் சிறுவனைக் காணவில்லை

கடந்த வாரம் புதன்கிழமையிலிருந்து காணாமல்போன 13 வயதுச் சிறுவன் இருக்கும் இடம் குறித்த விவரங்களைக் காவல்துறையினர் தேடுகின்றனர்.

பிரிதேஷ் ராம் சிவன் குமரன் (படம்) எனும் அச்சிறுவன், கடைசியாக அன்றைய தினம் புளோக் 146 சிராங்கூன் நார்த் அவென்யூ 1ல் இரவு 7.45 மணியளவில் காணப்பட்டார்.

தகவல் தெரிந்தோர் 1800-255-0000 எனும் எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம், அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையப் பக்கத்தில் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம். அனைத்து விவரங்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்று காவல்துறை குறிப்பிட்டது.

விபத்தில் வேன் ஓட்டுநர் மரணம்

தீவு விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் வேனும் டிரெய்லர் வாகனமும் சம்பந்தப்பட்ட விபத்தில், பொருள்களை இடமாற்றும் சேவை வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த 26 வயது ஓட்டுநர் உயிரிழந்தார். துவாசை நோக்கிச்செல்லும் தீவு விரைவுச்சாலையில் பைனியர் ரோடு நார்த் வெளிச்சாலைக்கு முன்னால் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து பிற்பகல் 2.35 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. வேன் ஓட்டுநர் தமது இருக்கையில் சிக்கிக்கொண்டதாகவும் அவரை மீட்க மீட்புக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அந்த ஆடவர் சுயநினைவுடன் இல்லை. காயங்கள் காரணமாக அவர் பின்னர் மரணமடைந்தார். விபத்தில் சிக்கிய மற்றொருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.

11 நிறுவனங்களுக்கு $27,000 அபராதம்

எளிதில் எரியக்கூடிய பொருள்களைக் கையாள்வதில் போதிய பாதுகாப்பான வேலை நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய 11 நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு $27,000 அபராதம் விதித்துள்ளது. ஊழியர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு கருவிகளை அவை வழங்கவில்லை. எரியக்கூடிய பொருள்களைக் கையாளும் 120க்கும் அதிகமான மோட்டார் வாகனப் பட்டறைகளை அமைச்சு மார்ச் மாதம் பரிசோதித்த பிறகு, விதிமீறிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.